பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

dinamani2Fimport2F20212F82F52Foriginal2Fsupreme court
Spread the love

நமது நிருபர்

பாலாறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு தணிக்கை குழுவை அமைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் செல்லும் பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் கடும் மாசு ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தத் தொழிற்சாலைகளை மூட உத்தரவிடக் கோரியும், மாசுபாட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலாறு மாசுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களுடன் கடந்த ஜனவரி 30}ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், அந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், பாலாறு மாசுபாடு விவகாரத்தில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

அதன்படி, அந்த மூன்று மாவட்டங்களின் ஆட்சியர்களும் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் 11}ஆம் தேதி ஆஜராகினர். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியும் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகினர். உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் பாலாறு மாசுபடுவதைத் தடுக்கத் தவறிவிட்டதாக உச்சநீதிமன்றம் அவர்களிடம் கூறியது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மாசுபாட்டைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கபில் சிபல், “கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், “இந்தப் பிரச்னையை ஒரே நாளில் தீர்க்க முடியாது என்பது தெரியும். அதேவேளையில் இந்த மாசுபாட்டைத் தடுக்க தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ எனக் கூறினர்.

மனுதாரரான வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் யோகேஸ்வரன், “இந்த விவகாரத்தில் கூடுதலாக தீவிர கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், தொழிற்சாலைக் கழிவு நீர் சரியான முறையில் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வெளியேற்றப்படும் நீரில் அமில அளவுகளை ஆய்வு செய்ய வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *