சென்னை: “இந்தாண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது” என்று 2025-26 பட்ஜெட் உரையின்போது தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். பள்ளிக்கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகளின் போது அவர் பேசுகையில், “பள்ளிக்கல்வித் திட்டத்தில் சமக்ர சிக் ஷா சார்பில் பல்வேறு மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்களை, கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை உறுதி செய்யும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, தொலைதூர குடியிருப்புகளில் இருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்துசென்று படித்திட போக்குவரத்து படி, ஆசிரியர்களின் ஊதியம், மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கிடும் உயர் கல்வி வழிகாட்டி மாணவர்களின் தனித்திறன்கள் மிளிர்ந்திட கலைத்திருவிழா, கல்விச் சுற்றுலா, இணைய வசதி, உள்ளிட்ட பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டங்கள் மாணவர்களின் கல்வி நலன் சார்ந்து, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும், இந்தாண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது. மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும் மாணவர்கள் நலன்கருதி, அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருதுளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்கு உரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்திலிருந்து விடுவித்துள்ளது.
நெருக்கடியான இந்த சூழ்நிலையிலும், 2000 கோடி ரூபாய் நிதியினை இழந்தாலும், இருமொழிக் கொள்கையை விட்டுத்தரமாட்டோம் என கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று தமிழகத்தின் தன்மானம் காத்த முதல்வரின் பின்னால் தமிழக மக்கள் அனைவரும் அணிவகுத்து உள்ளனர். எத்தனை தடைகள் எதிர்வரினும் மன உறுதியோடு நம்மை வழிநடத்தும் முதல்வரோடு தமிழக மக்கள் ஆதரவாய் திரண்டுள்ளனர்.
தொலைதூர மலைப்பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு குறிப்பாக பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலை நீக்கும் நோக்கத்தோடு, மாணவர்கள் அவர்களுடைய இருப்பிடத்துக்கு அருகிலேயே உயர் கல்வியைத் தொடர்ந்து பயின்றிட அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களில் உள்ள தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர் நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
மதுரையில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை புரிந்துள்ளனர். அதைத்தொடர்ந்து கோவை மற்றும் திருச்சியில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவைப் பரவலாக்கிடும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக சேலம், கடலூர் மற்றும் திருநெல்வேலியில் பொதுமக்கள் மற்றும் போட்டித் தேர்வு எழுதிடும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக தலா 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக்கூட வசதிகள் உடன் நூலகங்கள் அமைக்கப்படும், என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.