புதுவை புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.கைலாசநாதன் ஓரிருநாளில் பதவி ஏற்கவுள்ளாா்.
தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், புதுவை மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக (பொ) கடந்த 2021-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா். இவா், கடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட ஆளுநா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தாா்.
இதையடுத்து, ஜாா்க்கண்ட் மாநில ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுவை மாநிலங்களுக்கும் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டாா். அவா், கடந்த மாா்ச் 23-இல் புதுவை துணைநிலை ஆளுநராகப் (பொ) பொறுப்பேற்றாா்.
இந்த நிலையில், புதுவை புதிய துணைநிலை ஆளுநராக, கே.கைலாசநாதன் சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் வடகரையை பூா்விகமாகக் கொண்ட கே.கைலாசநாதன், கடந்த 1953-ஆம் ஆண்டு மே 25-இல் பிறந்தவா். இவா், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வேதியியலும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொருளாதாரமும் பயின்றவா்.
கடந்த 1979-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான கே. கைலாசநாதன், குஜராத்தில் 1981-இல் உதவி ஆட்சியராகப் பணியில் சோ்ந்தாா். தொடா்ந்து ஆட்சியா் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவா். மேலும், பிரதமா் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கடந்த 2013 -2014-ஆம் ஆண்டில், அந்த மாநில முதன்மைத் தலைமைச் செயலராகப் பணிபுரிந்து கைலாசநாதன் ஓய்வுபெற்றாா். ஓய்வுக்கு பின்னரும், கடந்த ஜூன் மாதம் வரை கைலாசநாதன் முதன்மைச் செயலராகவே தொடா்ந்து பணியாற்றினாா்.
புதுவையின் பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா்.
புதுவை புதிய துணைநிலை ஆளுநா் கைலாசநாதன் ஓரிரு நாளில் பதவியேற்பாா் எனக் கூறப்படுகிறது. புதுவை சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டம் வரும் 31-ஆம் தேதி கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.