மக்களின் மீதான பொருளாதார யுத்தமே சமையல் எரிவாயு விலை உயர்வு: மார்க்சிஸ்ட் | CPI(M) State secretary P. Shanmugam slams central govt over Cooking Gas Price Hike

1357415.jpg
Spread the love

சென்னை: சமையல் எரிவாயு விலை உயர்வின் மூலம் எளிய மக்களின் மீது பொருளாதார யுத்தத்தை தொடுக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக வலுவான கண்டன இயக்கங்களை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, பெட்ரோல் மற்றும் டீசல் மீது சிறப்பு கலால் வரி உயர்த்தப்பட்டதால் அதன் விலையும் அதிகரித்திருக்கிறது.

ஏற்கெனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு என்பது மேலும் ஒரு பேரிடியாகும். சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறைந்துவரும் நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வு மூலம் சுமார் ரூ.7,000 கோடி அளவுக்கும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சிறப்பு கலால் வரி அதிகரிப்பால் சுமார் ரூ.32,000 கோடி அளவுக்குமான சுமையை ஒன்றிய பாஜக அரசு மக்கள் தலையில் சுமத்தியிருக்கிறது.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிற இத்தகைய நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. ஒன்றிய அரசு உடனடியாக எரிவாயு விலை மற்றும் சிறப்பு கலால் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.

இத்தகைய விலை உயர்வின் மூலம் எளிய மக்களின் மீது பொருளாதார யுத்தத்தை தொடுக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக வலுவான கண்டன இயக்கங்களை நடத்த வேண்டுமெனவும் கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *