மதுரை: அதிமுகவில் அதிருப்தியுடன் பயணம் செய்துவந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதுரையில் திடீரென்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு, இருவரும் ஒரே காரில் பசும்பொன் புறப்பட்டு சென்றனர். இருவரும் அதிமுகவில் பழனிசாமிக்கு எதிரானவர்களை ஒன்றினைக்க நடக்கும் முயற்சியாக பார்க்கப்படுவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா காலம் வரை, செல்வாக்கு மிக்க நபராக இருந்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதா இவரை அவ்வப்போது ஒதுக்கி வைப்பதும், மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்புகள் கொடுத்தும் முக்கியத்துவம் வழங்குவதுமாக இருந்து வந்தார். ஆனாலும், மற்றவர்களை போல் ஜெயலலிதா மீது அதிருப்தியடைந்து மாற்றுக்கட்சிக்கு செல்லாமல் அதிமுகவிலே நீடித்து வந்தார்.
ஜெயலலிதா முறைவுக்கு பிறகு, சசிகலா கே.பழனிசாமியை முதல்வராக்கிய போது கட்சியில் ஓரங்கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த செங்கோட்டையனை அழைத்து மீண்டும் அமைச்சர் பதவி வழங்கி முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர்களுடன் செங்கோட்டையன் செல்லாமல் கே.பழனிசாமியுடன் உறுதியாக நின்றார்.
இந்நிலையில் செங்கோட்டையன், கே.பழனிசாமியுடன் முரண்பட்டு நிற்கவே, அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெடு விதித்தார். அதிருப்தியடைந்த கே.பழனிசாமி, உடனடியாக செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வசமிருந்த கட்சிப் பொறுப்புகளை பறித்தார். ஆனால், கே.பழனிசாமிக்கு எதிராக உடனடியாக சீறுவார் என எதிர்பார்த்த நிலையில் செங்கோட்டையன் அமைதியாகவே இருந்து வந்தார்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக மதுரை வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ‘திடீர்’ ஆலோசனை செய்தார். அதன்பின் இருவரும் ஒரே காரில் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அதிமுகவுக்கு எதிரான கட்சி செயல்பாடுகளில் ஈடுபட்டதாக நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் புறப்பட்டுச் சென்றது, அதிமுக மட்டுமில்லாது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், கே.பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரனுடன் சசிகலா தலைமையில் ஒன்றினைவதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம், தவெக நிர்வாகி சிடி.நிர்மல் குமார், சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்த நிலைபாட்டிலே தவெக இருப்பதாக கூறியதால், அவர்கள் அதிமுக-பாஜக கூட்டணிக்கு செல்லவாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதனால், வரும் தேர்தலில் ஆட்சியைப்பிடிக்க திமுகவுக்கு எதிராக அதிமுகவை பலமாக்க வேண்டும் என்ற குரல்கள் அக்கட்சியின் கீழ் மட்டத்தில் இருந்து மட்டுமில்லாது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மத்தியிலும் கலக குரல்கள் கேட்க தொடங்கியிருக்கின்றன.
ஒ.பன்னீர்செல்வம், அதிமுகவின் உரிமை சார்ந்த விவகாரங்களில் வழக்குப் போட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், அதிமுக இருக்கும் பாஜக கூட்டணியில் இருக்கப் போவதில்லை என்று அக்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகியது. கே.பழனிசாமியை வீழ்த்துவதே முதல் நோக்கமாக கொண்டு அவர் செயல்படுகிறார். அவருடன் ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் சேர்ந்து இருப்பதால் எதிர்கால அரசியல் மாற்றத்திற்கு ஒரு அடித்தளமாக இருக்கப்போகிறது என்றும், அதிமுகவுக்கு இந்த மூவரால் வரும் தேர்தலில் சிக்கல் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆனால், கே.பழனிசாமியை பொறுத்தவரையில் ஓபன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஆதங்கமும், அதிருப்தியையும் செங்கோட்யனை ஏதோ ஒரு வகையில் முடிவெடுக்க வைத்துள்ளதாலே அவர் இணைந்துள்ளதால் இன்றே அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான ஆலோசனையில் கட்சி நிர்வாகிகளுடன் கே.பழனிசாமி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, இன்னும் சில மணி நேரங்களில் மதுரையில் கே.பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.