முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் மனு: தீர்ப்பை தள்ளிவைத்தது நீதிமன்றம் | Madurai Atheenam anticipatory bail plea Court postpones verdict

1369608
Spread the love

சென்னை: முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பினை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

கடந்த மே 2-ம் தேதி சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை – சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும், இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்தனர், தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இந்நிலையில் இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உள் நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கபட்டது.

காவல்துறை தரப்பில், கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதால் மதுரை ஆதீனத்திற்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது, அவரின் முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கபட்டது. இதையடுத்து நீதிபதி, முன்ஜாமீன் கோரிய மதுரை ஆதீனத்தின் மனுவின் மீதான தீர்ப்பினை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *