மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 31,102 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்து, நீர்வளத் துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.
கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை காலை விநாடிக்கு 23,989 கன அடியாகவும், மதியம் 12 மணி நிலவரப்படி 27,665 கன அடியாகவும் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், மாலையில் 4 மணிக்கு நீர் வரத்தின் அளவு விநாடிக்கு 31,102 கனஅடியாக மேலும் அதிகரித்தது. நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலையில் அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக இருந்த நிலையில் மாலையில் 51.38 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 17.83 டிஎம்சியில் இருந்து 18.69 டிஎம்சியாக- உயர்ந்துள்ளது.குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனிடையே, மேட்டூர் அணையில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீர் வளத்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் (பொ) தயாளகுமார் இன்று ஆய்வு செய்தார். மேட்டூர் அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் வெள்ள நீர் போக்கி, கவர்னர் வியூ பாயூண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அவர் பார்வையிட்டார். ஆய்வின்போது, மேட்டூர் அணை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் அணையின் வரைபடங்களை கொண்டு அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துரைத்தனர்.
பின்னர், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் (பொ) தயாளகுமார் கூறுகையில், “கர்நாடக, கேரளா பகுதியில் அதிதீவிரமாக பெய்து வருவதால், கபினி, கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்து. கபினி முழுகொள்ளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 70 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர் மட்டம், நீர்வரத்து ஆகியற்றை பொறுத்து, டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பது குறித்து அரசு முடிவு செய்யும்,” என்றார்.