நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முப்படை தளபதிகளும் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. அப்போது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் நாட்டின் பல்வேறு எல்லைகளில் பணிபுரியும் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஆனால் பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன எல்லையான தவாங் பகுதியில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளி கொண்டாட உள்ளார். இந்நிகழ்ச்சியில், ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இதே மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இதுபோல முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் அந்தமான் நிக்கோபரில் பணிபுரியும் வீரர்களுடனும், கடற்படை தளபது அட்மிரல் தினேஷ் திரிபாதி குஜராத்தின் போர்பந்தரில் உள்ள வீரர்களுடனும் விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி.சிங் ஜம்மு காஷ்மீரில் பணிபுரியும் வீரர்களுடனும் தீபாவளி கொண்டாட உள்ளனர்.