சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கின், புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக திருச்சி டிஐஜி மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி. ஆகியோரை கூடுதலாக சிறப்பு புலனாய்வு குழுவில் இணைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு திருச்சியில் நடைபயிற்சி மேற்கொண்டபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் மனைவி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்பேரில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், இந்த வழக்கை தமிழக அரசின் காவல் துறை அதிகாரிகளே விசாரிக்க உத்தரவிட வேண்டும், எனக் கோரி ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிசிஐடி டிஜிபி-யின் கண்காணிப்பில் தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரான அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “இந்த வழக்கில் பல்வேறு கோணத்தில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கொலைக்கான காரணம் மற்றும் உள்நோக்கமும் ஆராயப்பட்டு புலன் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி எஸ்.பி.யாக பதவி வகித்த ஜெயக்குமார் திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக இடமாறுதல் செய்யப்பட்டாலும், இந்த வழக்கிலும் விசாரணை தொய்வின்றி நடந்து வந்தது.
ஆனால், அவர் தற்போது கடலூர் எஸ்.பி.யாக பணிபுரிந்து வருவதால் இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்குப் பதிலாக திருச்சி அல்லது அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சிறப்பு புலனாய்வுக்குழுவில் இணைக்க வேண்டும்,” என்றார்.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, திருச்சி ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான ஜெயக்குமாருக்குப் பதிலாக திருச்சி டிஐஜி மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி. ஆகியோரை கூடுதலாக நியமித்தும், இந்த அதிகாரிகள் ஏற்கெனவே உள்ள சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகளுடன் இணைந்து இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.