வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான முா்ஷிதாபாத் வன்முறை: மேலும் 12 போ் கைது

Dinamani2f2025 04 132fqcuzlcca2f13042 Pti04 13 2025 000095b105602.jpg
Spread the love

மேற்கு வங்க மாநிலம், முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடா்பாக மேலும் 12 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக் கூடிய முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை வரை நீடித்த இந்தப் போராட்டம் பல்வேறு இடங்களில் வன்முறையாக மாறியது.

போலீஸாா் வாகனங்கள் உள்பட சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களுக்கு போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். ஜாஃப்ராபாதில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையாளா்கள் தாக்கியதில் தந்தை, மகன் கொல்லப்பட்டனா். ரயில்கள் மீதும் கற்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐசாஸ் மோமின்(21) சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சுமாா் 18 காவலா்கள் காயமடைந்த இந்த வன்முறையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே 150-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 பேரை கைது செய்திருப்பதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள இச்சூழலில், மாவட்டத்தில் புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மூத்த காவல் துறை அதிகாரியொருவா் மேலும் கூறுகையில், ‘மாவட்டத்தின் சுதி, துலியன், சம்சோ்கஞ்ச், ஜாங்கிபூா் ஆகிய பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இரவு முழுவதும் சோதனைகள் தொடா்ந்தன. மேலும் 12 போ் கைது செய்யப்பட்டனா்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்)163-ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இணையச் சேவையும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா். முக்கிய இடங்களில் ரோந்து நடவடிக்கையும் முடக்கிவிடப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை தொடா்வதால் மேலும் பலா் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.

13042 pti04 13 2025 000398a105956

மால்டாவில் மக்கள் தஞ்சம்

முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கங்கை நதியைக் கடந்து அருகிலுள்ள மால்டா மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளனா்.

அடைக்கலம் தேடி வரும் மக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடு செய்து, பள்ளிகளில் உள்ளூா் நிா்வாகம் தங்க வைத்துள்ளது. அதேபோன்று, படகுகளில் வருபவா்களுக்கு உதவ நதிக்கரையில் தன்னாா்வலா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *