‘வக்பு சட்டம் 1995-ல் திருத்தங்கள் தேவையில்லை, ஏனெனில்…’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | No amendments needed in Waqf Act 1995 – CM Stalin letter to Prime Minister

1356654.jpg
Spread the love

சென்னை: 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.2) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் விவரம்: இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குகிறது. அந்த உரிமையை நிலைநாட்டுவதும் பாதுகாப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கடமையாகும். இருப்பினும், வக்பு சட்டம், 1995-ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாததுடன் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கு கடுமையான பாதிப்புகளை விளைவிப்பதாக இருக்கிறது.

தற்போதுள்ள வக்பு சட்டத்தில் உள்ள அம்சங்கள் நீண்டகாலமாகச் சிறந்த பயன்பாட்டில் உள்ளது. வக்பு சொத்துகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் உள்ளன. வக்பு சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், வக்பு சொத்துக்களை நிருவகிப்பதிலும், பாதுகாப்பதிலும் வக்பு வாரியங்களின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பலவீனப்படுத்தும் வகையிலும் உள்ளது. மேலும் தற்போதுள்ள சட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் முன்மொழியப்பட்டுள்ள பெரிய அளவிலான திருத்தங்கள், அச்சட்டத்தின் நோக்கத்தையே நீர்த்துப்போகச் செய்துவிடும்.

உதாரணமாக, மாநில வக்பு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை கட்டாயமாக சேர்ப்பது என்பது முஸ்லிம் சமூகத்தின் மத மற்றும் தொண்டு அறக்கட்டளைகளை சுயாதீனமாக நிருவகிக்கும் திறனை மற்றும் மத சுயாட்சியை குறைத்து மதிப்பிடுவதாக அமைவதுடன், ‘வக்பு பயனர்’ விதியை நீக்குவது பல வரலாற்று அடிப்படையிலான வக்பு சொத்துக்களின் உரிமைக்கு அச்சுறுத்தலாக அமையும்.

மேலும், குறைந்தது ஐந்து ஆண்டுகள் இஸ்லாத்தை கடைப்பிடித்தவர்கள் மட்டுமே வக்புக்கு சொத்துக்களை நன்கொடையாக வழங்கமுடியும் என்ற நிபந்தனை முஸ்லிம் அல்லாதவர்கள் வக்புக்கு சொத்துக்களை நன்கொடையாக வழங்குவதைத் தடுத்துவிடும். இது நாட்டின் மத நல்லிணக்கக் கலாச்சாரத்துக்கு இடையூறாக இருக்கும்.

தற்போதுள்ள ‘வக்பு சட்டம் – 1995’ போதுமானதாகவும், வக்புகளின் நலன்கள் மற்றும் சொத்துகளைப் பாதுகாக்க தெளிவான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாலும், வக்பு சட்டம், 1995-ல் இதுபோன்ற திருத்தங்கள் இப்போது தேவையில்லை என்பதே எங்கள் கருத்து.

மேற்கூறிய அனைத்தையும் கருத்தில்கொண்டு, வக்பு (திருத்த) சட்டம், 2024ஐ முழுமையாக திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்த தமிழக சட்டப் பேரவை மார்ச் 27-ம் தேதி அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தின் நகலை இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாகவும், சிறுபான்மை முஸ்லிம் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், வக்பு அமைப்புகளைப் பாதுகாப்பதிலும் பிரதமர் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *