பிகார் மாநிலம் பாட்னாவில் வாழ்ந்து வந்தவர் இந்திர குமாரி. இந்திர குமாரிக்கும் நகுல் ஷர்மா என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், இந்திர குமாரியின் கணவர் நகுல் மது பழக்கத்துக்கு அடிமையாகியிருந்ததால் தினமும் குடித்துவிட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், கணவனால் உடலளவிலும் மனதளவிலும் பெரும் துயரங்களை அனுபவிக்க தொடங்கிய இந்திர குமாரிக்கு, அவர்கள் வீட்டுக்கு வட்டி வசூலிக்க வரும் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நிதி நிறுவன ஊழியரான பவன்குமார் யாதவ், வட்டி தொகை வசூலிப்பதற்காக அவ்வப்போது இந்திர குமாரியிடம் வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், இவர்கள் இருவருக்குமிடையே நட்பு வளர்ந்தது, இந்த உறவு நாளடைவில் காதலாகவும் மலர்ந்தது.
தனது கணவனால் ஏற்படும் கொடுமைகளை இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாதென முடிவெடுத்த இந்திர குமாரி, பவன்குமாரிடம் தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவரும் தனியாகச் சென்று குடும்பம் நடத்துவதென்ற துணிச்சலான முடிவுக்கு வந்துள்ளனர்.
அதன்படி, அவர்கள் இருவரும் பாட்னாவிலிருந்து கடந்த 4-ஆம் தேதி புறப்பட்டு இந்திர குமாரியின் உறவினரின் வீடு அமைந்துள்ள மேற்கு வங்கத்தின் ஆசான்சோலுக்கு விமானம் மூலம் சென்றுள்ளனர். பவன்குமாரின் உறவினர்கள் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் பிப். 11-ஆம் தேதி திருமணமும் செய்து கொண்டனர்.