வள்ளி கும்மி கலைஞர் பாலுவுக்கு கலைமாமணி விருது வழங்க விசிக எதிர்ப்பு | VCK Oppose to Give Kalaimamani Award for Valli Kummi Artist Balu

1377738
Spread the love

சென்னை: வள்ளி கும்மி கலைஞர் கே.கே.சி.பாலுவுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு வெளியிட்ட அறிக்கையில், “கலை, இலக்கியம், சினிமா என பல்வேறு துறைகளில் சாதனை செய்த ஆளுமைகளுக்கு இந்த கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வரவேற்கக் கூடியது. தற்போது கிராமிய கலைகளுக்கான கலைமாமணி விருதுகளில் கிராமிய பாடகர்களுக்காக வீர சங்கரும், பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்காக காமாட்சியும், நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக மருங்கன், பெரிய மேளத்துக்காக முனுசாமியும் கலைமாமணி விருது பெறுகின்றனர். விருதாளர்களுக்கு விசிகவின் வாழ்த்துகள்.

இந்த வரிசையில் வள்ளி கும்மியை முன்னெடுத்த கே.கே.சி.பாலுவுக்கும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வள்ளி கும்மி மூலம் ‘வேறு சாதி ஆண்களை திருமணம் செய்ய மாட்டோம்’ என சத்தியம் வாங்கி வருகிறார் பாலு. இது பெண்கள் தங்களது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளுக்கு எதிரானதாகும்.

அதுவும் பெண் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெரியார் மண்ணிலிருந்தே இந்த சனாதன நச்சுக் கருத்தியலை முன்னெடுத்து வரும் கே.கே.சி.பாலுவுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும். எனவே, பாலுவுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். சாதியத்தை பரப்பிவரும் வள்ளி கும்மியை தடை செய்ய வேண்டும்” என்று வன்னியரசு தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *