தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
முதல்வா் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வா் பொறுப்புக்கு நியமித்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளாா்.
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், முதல்வா் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று துணை முதல்வராக நியமிக்கப்படுவதாகவும், அவரிடம் கூடுதலாக திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அளிக்கப்படுவதாகவும் ஆளுநா் மாளிகை சனிக்கிழமை(செப்.28) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர்கள் சிலம்பரசன் டிஆர், வடிவேலு உள்பட திரைத்துறையைச் சேர்ந்த பலரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் சிலம்பரசன் இன்று (செப். 29) வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், வாழ்த்துகள் உதயநிதி ஸ்டாலின் அண்ணா! சாதனைகள் பல காத்திருக்கின்றன எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.
Congratulations @Udhaystalin Anna! Here’s to many more achievements ahead! #DeputyCMUdhay
— Silambarasan TR (@SilambarasanTR_) September 29, 2024
நடிகர் வடிவேலு இன்று (செப். 29) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், துணை முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு வேகமும் விவேகமும் தொடர் வெற்றியைத் தர வாழ்த்துகள் என நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
முன்னதாக, நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ் ஆகியோரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.