விக்கிரவாண்டி அருகே கழிப்பறையில் வசிக்கும் மூதாட்டி – பட்டா இல்லாததால் அரசு வீடு தர மறுப்பு | An old woman living in a toilet near Vikravandi

1283471.jpg
Spread the love

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (60). இவரது கணவர் ராஜாராம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். அவர்கள் தாயை பார்க்க வருவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மாரிமுத்து வசித்து வந்த குடிசை வீடு ஓராண்டுக்கு முன்பு சேதமடைந்து இடிந்து விழுந்தது. இதையடுத்து மூதாட்டி தொகுப்பு வீடு கேட்டு ஊராட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்தார். அப்போது வீடு உள்ள இடத்திற்கு பட்டா இல்லாததால் அரசு வழங்கும் தொகுப்பு வீடு தர இயலாது என தெரிவித்தனர். இதையடுத்து மூதாட்டி தான் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்களுடன், அரசு வழங்கிய கழிப்பறையில் தஞ்சமடைந்தார். கழிப்பறையில் போதிய இடவசதி இல்லாததால் இரவு நேரங்களில் அருகில் உள்ள கோயில் மற்றும் பக்கத்து வீடுகளிலும் உறங்குகிறார்.

இதுகுறித்து மூதாட்டியிடம் கேட்டபோது, “மகன், மகள் கைவிட்டாலும், மல்லிகை தோட்டத்தில் பூ பறித்து வரும் தொகையை கொண்டு உணவு, மாத்திரையை வாங்கி தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறேன். வீடு முழுவதுமாக இடிந்து வீட்டின் இரும்பு கதவு மட்டுமே நிற்பதால் கழிப்பறையில் தங்கியுள்ளேன். அக்கம்பக்கத்தில் உள்ள சிலர் அவ்வப்போது உணவும் இரவு நேரத்தில் உறங்க இடமும் கொடுக்கின்றனர். சில நாட்கள் அருகிலுள்ள விநாயகர் கோயிலிலும் தங்கி வருகிறேன்” என்றார். நிற்கதியாய் உள்ள மூதாட்டி கழிப்பறையை வீடாக பயன்படுத்துவதை பார்க்கவே மனம் வேதனை படுவதாகவும், அதிகாரிகள் மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அக்கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *