வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் | PMK founder Ramdoss insists government to repeal allowing register properties that have disputes

1309324.jpg
Spread the love

சென்னை: வழக்குகளில் சிக்கிய வில்லங்க சொத்துகளை பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறை அனுமதித்தால், அது சொத்துகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும். அத்தகைய அநீதிக்கு தமிழக அரசும், பத்திரப் பதிவுத்துறையும் துணைபோகக் கூடாது. எனவே, வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவை தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. பத்திரப்பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.

வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையும் பத்திரப்பதிவு செய்யலாம் என்பதற்காக பத்திரப்பதிவுத் துறை கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை. சர்ச்சைக்குரிய சொத்துகள் மீது நீதிமன்றங்கள் எந்த ஆணையையும் பிறப்பிக்காத நிலையில், அதன் விற்பனையை தடுக்கக் கூடாது என்று சில வழக்குகளில் நீதிமன்றங்கள் வழிகாட்டியிருப்பதாகவும், வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளை பத்திரப்பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புவதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அதைத் தவிர்ப்பதற்காகவே இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் பத்திரப்பதிவுத்துறை கூறியுள்ளது. இது அபத்தமானதாகும்.

பத்திரப்பதிவுத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய, நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையெல்லாம் பதிவு செய்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது. வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகள் மீது எந்த ஆணையும் பிறப்பிக்கப்படாத நிலையில், அதை பதிவு செய்யலாம் என்று நீதிமன்றங்கள் கூறியிருந்தால், அதை அந்த வழக்குடன் தொடர்புடைய சொத்துடன் மட்டும் தான் பொருத்திப் பார்க்க வேண்டுமே தவிர, அனைத்துச் சொத்துகளுக்கும் அந்த வழிகாட்டுதலை பின்பற்ற முடியாது.

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சொத்துகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதைப்போலவே பிறருடைய சொத்துகள் அபகரிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய தருணத்தில் பத்திரப் பதிவுகள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செய்யப்பட வேண்டும். வருவாயை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு பத்திரப்பதிவுத் துறை செயல்படக்கூடாது.

உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பல சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுகின்றன. அவ்வாறு அபகரித்த சொத்துகளை ஒருவர் இன்னொருவருக்கு விற்க முயலும் போது, அதை எதிர்த்து சொத்தின் உண்மையான உரிமையாளர் வழக்கு தொடரும் நிலையில், அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை சொத்தை பதிவு செய்யாமல் இருப்பது தான் சரியானத் தீர்வு ஆகும். மாறாக, அந்த சொத்து தொடர்பான வழக்கில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கவில்லை என்பதற்காக சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டால், மோசடி செய்தவர் பெரும் லாபத்துடன் தப்பி விடுவார். சொத்தின் உரிமையாளரும், அதை வாங்கியவரும், வாங்குவதற்கு கடன் கொடுத்த வங்கிகளும் தான் பாதிக்கப்படுவார்கள். இதை பத்திரப்பதிவுத்துறை உணர வேண்டும்.

வழக்குகளில் சிக்கிய வில்லங்க சொத்துகளை பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறை அனுமதித்தால், அது சொத்துகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும். அத்தகைய அநீதிக்கு தமிழக அரசும், பத்திரப் பதிவுத்துறையும் துணைபோகக் கூடாது. எனவே, சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவை தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை திரும்பப் பெற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *