மகள், சகோதரி அல்லது மனைவியோ, தாயோ அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்று சேர்ந்துவிட்டாள்; இனி கவலைப்பட வேண்டாம், எதிர்காலம் ஒளிமயமாக மாறிவிடும்…
என்ற எண்ணம்தான் இப்படிப் பெண்களை வீட்டு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்பிய இங்குள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கும், இருக்கிறது (இந்தியாவில் கேரளத்திலிருந்துதான் அதிகளவிலான பெண்கள், பெரும்பாலும் செவிலியர் பணி, வெளிநாடுகளுக்கு, குறிப்பாக, வளைகுடா நாடுகளுக்கு வேலைகளுக்குச் செல்கிறார்கள்).
ஆனால், உள்ளபடியே வெளிநாடுகளுக்குச் சென்ற பெண்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கை நிலைமை என்ன? நிம்மதியாகத்தான் இருக்கிறார்களா? எல்லாம் ஒளிமயமாகத்தான் இருக்கின்றனவா?
வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைகளுக்கு என்று செல்லும் பெண்களின் மிக மோசமான நிலைமை பற்றி லண்டனிலிருந்து வெளிவரும் ‘தி கார்டியன்’ இதழ், இரு ஆண்டுகளுக்கும் மேலாகத் திரட்டிய, கண்டறிந்த அதிர்ச்சித் தகவல்களை அண்மையில் வெளியிட்டுள்ளது.
லெபனானில் மட்டும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளிலிருந்து வந்துள்ள இரண்டரை லட்சம் பேர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்; சராசரியாக ஒரு நாளுக்கு இரு வீட்டுவேலைப் பணியாளர்கள் அங்கேயே உயிரிழந்துகொண்டிருக்கிறார்கள். வளைகுடா நாடுகளிலுள்ள கஃபாலா முறையில் வீட்டு வேலைகள் பார்த்துக்கொண்டிருக்கும் சுமார் 50 பெண்கள் தங்கள் வாழ்க்கை நிலைமையை கார்டியனுடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
அடிமை முறைக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் தருவதெனக் குற்றம் சாட்டப்பட்டு வந்தபோதிலும் இன்னமும் பெண்களை இழிவுக்குள்ளாக்குவதை, சமுதாயத்திலிருந்தே அகற்றப்படுவதை (இருக்கிறார்களா என்பதுகூட தெரியாத அளவுக்கு) அனுமதிக்கும் கஃபாலா சட்டங்கள் தொடருகின்றன.
மிகவும் அபாயகரமானது, துன்புறுத்தக் கூடியது என்று கண்டிக்கப்படும் கஃபாலா தொழிலாளர் முறையானது, புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை மறுப்பதுடன் மட்டுமின்றி, சுரண்டவும் வழிவகுக்கிறது.
கஃபாலா (ஸ்பான்சர்ஷிப்) முறையை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் பணி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கத்தார் நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் அவை ஆலோசனை கூறி, பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் லெபனான், ஜோர்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் இன்னமும் இந்த முறை தொடருகிறது.
ஐக்கிய அரபு நாடுகள், சௌதி அரேபியா, குவைத், ஓமன், கத்தார் அல்லது ஜோர்தான் நாடுகளில் பணியில் இருக்கும் அல்லது பணிகளை முடித்துவிட்ட வீட்டுவேலைப் பணியாளர்களுடன் இரு ஆண்டுகளுக்கும் மேலாக கார்டியன் உரையாடித் தகவல்களைத் திரட்டியிருக்கிறது.
பெரும்பாலும் தனியார் வீடுகளில் பணிபுரியும் வீட்டு வேலைக்காரப் பெண்கள் முற்றிலுமாக அவர்களுடைய உரிமையாளர்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
கஃபாலா சட்டங்கள் திருத்தப்பட்ட அல்லது சீரமைக்கப்பட்டதாக 2014-க்குப் பிந்தைய கத்தார் பற்றிய ஐ.நா. அறிக்கை தெரிவிக்கும் நாடுகளிலேயேகூட, பெரிதாக மாற்றம் எதுவுமில்லை. பெண்கள் வீட்டு வேலைகளில் கட்டாயப்படுத்திதான் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
கார்டியன் சந்தித்துப் பேசிய பெண்கள் அனைவருமே வாரத்தின் ஏழு நாள்களுமே வேலை பார்த்திருக்கின்றனர். அவர்களுடைய கடவுச் சீட்டுகளை அவர்களுடைய உரிமையாளர்கள் பறித்துவைத்துக் கொண்டிருந்தனர். பலரும் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பெரும்பாலோர் இந்த வேலையைப் பெறுவதற்காகப் பணம் செலுத்தியுள்ளனர். இவையெல்லாமுமே ஐ.நா. அவையின் வரையறைப்படி, மனித கடத்தலைக் குறிப்பவைதான்.
சற்றும் மனிதத் தன்மையற்ற வகையில், விலங்குகளைப் போல நடத்தப்படுவது பற்றிப் பெண்கள் பேசியிருக்கின்றனர். ஜோர்தானில் இரு ஆண்டுகளாக 2022 வரை ஆறு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்துக்காக அடுக்குமாடிக் குடியிருப்பில் வேலை பார்த்த பிலிப்பின்ஸைச் சேர்ந்த பெர்லா (33 – பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், தனக்கு ரொட்டி, நூடுல்ஸ் என ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டதாகவும் படுக்கைகூட கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளியிலுள்ள பால்கனியில்தான் நான் உறங்கினேன். மிகவும் குளிராக இருக்கும், நான் தூங்குவதை அருகிலுள்ளவர்களால் பார்க்க முடியும் என்று குறிப்பிடுகிறார் இந்தப் பெண்.
பீட்ரைஸ் என்ற பெண்ணிடம் வேலைக்கு ஆள்களை எடுத்து அனுப்பும் அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரே, ஓமனில் படிப்பதற்கு உதவித் தொகை கிடைத்திருப்பதாகத் தெரிவித்துதான் அனுப்பியிருக்கிறார். 2021-ல் வந்தபோது, அவரை வேலை செய்ய அனுப்பிவிட்டனர்.
வேலை மிகவும் கடினம். சுத்தம் செய்ய வேண்டும், காரைக் கழுவ வேண்டும், துணி துவைக்க வேண்டும். எங்களுக்கு விடுமுறை என்று எதுவும் கிடையாது. அவர்கள் அடிப்பார்கள், பட்டினி போடுவார்கள் என்று சொல்லும் பீட்ரைஸ், நாங்கள் செத்துக்கொண்டிருக்கிறோம், எங்களுக்கு உதவி வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
கஃபாலா சட்டப்படி, தங்கள் உரிமையாளர்களால் துன்புறுத்தக்கூடிய நிலையில்தான் வீட்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள் – அவர்கள் வேலை செய்யும் இடத்தை விட்டு வெளியேறுவது கிரிமினல் குற்றமாகும்.
கஃபாலா சட்டம் நடைமுறையிலுள்ள இடங்களில் புலம்பெயர்ந்து வந்து வேலைக்காரப் பெண்களுக்கு எதிராக மோசமான அத்துமீறல்கள் இருப்பதாக புலம்பெயர்ந்தோர் உரிமைக்கான முன்னாள் ஐ.நா. அலுவலர் பிலிப் கோன்சாலே மொரேல்ஸ் தெரிவிக்கிறார். இந்த கஃபாலா முறையை அரசுகள் ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் பெண் பணியாளர்கள் மிகுந்த சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
எண்ணெய் வளம் காரணமாக இந்த நாடுகள் திடீரென பெரும் பணம் படைத்தவையாக மாறிவிட்ட நிலையில் இவர்களுக்கு வேலை செய்ய நிறைய ஆள்கள் தேவைப்படுகிறார்கள். கஃபாலா முறை மிகவும் ஒடுக்குமுறை வடிவமாக மாறிவிட்டது என்று முன்னாள் ஐ.நா. அலுவலர் பிரான்சுவா க்ரீப் குறிப்பிட்டுள்ளார். எண்ணெய் வரும் காலத்துக்கு முன்னர், இவர்களுக்காக வேலை பார்க்க இவ்வளவு பேர் இல்லை, இவ்வளவு செல்வக் குவிப்பும் இங்கு இல்லை என்கிறார் அவர்.
கஃபாலா முறை அடிமை முறையைத்தான் போற்றிப் பாதுகாக்கிறது. இதனால் மக்களுக்கு எல்லாவித உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. அவர்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்றும் அமெரிக்க சட்டப் பேராசிரியர் பெர்னார்ட் ப்ரீமென் குறிப்பிட்டுள்ளார்.
கஃபாலா முறையில் சீர்திருத்தங்களைப் பல நாடுகள் செய்திருப்பதாகத் தெரிவிக்கின்றன. ஆனால், தொழிலாளர்களின் வாழ்க்கையில் பெரிய பயனேதுமில்லை.
வளைகுடா நாடுகளில் சீர்திருத்தங்கள் மெதுவாக நடைபெறுகின்றன. கஃபாலா முறையை ஓமன் கொஞ்சமும் மாற்றவேயில்லை. சௌதி அரேபியாவில் ஆகக் குறைவு – நிறைய செய்வதாகச் சொல்வார்கள், ஆனால், அப்படி இல்லை என்று மனித உரிமைகள் காப்பகத்தின் ரோத்னா பேகம் என்பவர் தெரிவிக்கிறார்.
கஃபாலாவை ஒழித்துவிட்டதாகவும் விடுப்பு, இடைவேளைகள், முதலாளிகளை மாற்றிக்கொள்ளும் உரிமை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவிக்கிறது. ஆனால், முற்றிலுமாக அவை அகற்றப்படவில்லை, இன்னமும் முதலாளிகளின் கட்டுப்பாட்டில்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று பேகம் தெரிவித்துள்ளார்.
முதலாளிகள் அல்லது ஆளெடுப்பு நிறுவனங்களால் தாங்கள் ‘துன்புறுத்தப்பட்டதாக’ அமீரக நாடுகளில் வேலை பார்க்கும் அல்லது பார்த்த 19 பெண்கள் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு வார விடுமுறையே வழங்கப்பட்டதில்லை என்று பலரும் தெரிவித்துள்ளனர். எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் தன்னுடைய முதலாளியிடமிருந்து விலகுவதற்காக பிலிப்பின்ஸ் தூதரகத்தை நாடியுள்ளார் யாஸ்மின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர். அவருடைய கடவுச்சீட்டு, அடையாள அட்டை எல்லாமும் முதலாளியிடம்தான் இருக்கின்றன. 13 ஆயிரம் ரியால்கள் – சுமார் ரூ. 3 லட்சம் – கொடுத்தால்தான் வெளியேற அனுமதிப்பேன் என்று அவருடைய முதலாளி மறுத்திருக்கிறார். அவரால் ஒருக்காலும் இவ்வளவு பெரிய தொகையைப் புரட்டித் தர முடியாது. ‘நான் இங்கிருந்து செல்ல விரும்புகிறேன். ஒரு நாள் வார விடுப்புகூட இல்லாமல் வேலை பார்த்து மிகவும் அயர்ந்துபோய்விட்டேன், மிக மனஅழுத்தமாக இருக்கிறது. தற்கொலை செய்துகொண்டுவிடலாம் என்றுகூட தோன்றுகிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
2023 ஜனவரியில் குவைத்தில் வீட்டு வேலை செய்துகொண்டிருந்த ஜல்லபி ரனாரா என்ற பிலிப்பின்ஸ் நாட்டுப் பெண், அவர் வீட்டு முதலாளியின் 17 வயது மகனால் வல்லுறவு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். எரிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடல் பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்டது.
2018-ல் குவைத்திலுள்ள அடுக்ககக் குடியிருப்பொன்றில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஜோனா டெமாபெலிஸ் என்ற 29 வயதுப் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரை ஓராண்டாகக் காணாமல்போய் விட்டதாகக் கூறிக்கொண்டிருந்தனர்.
2016 முதல் 2021 வரை சௌதி அரேபியாவில் வங்க தேசத்தைச் சேர்ந்த சுமார் 70 பெண்கள் உயிரிழந்துள்ளனர்; இவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
லெபனானில் சராசரியாக வாரத்துக்கு இரண்டு வீட்டு வேலைக்காரப் பெண்கள் உயிரிழக்கிறார்கள் என அந்த நாட்டின் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பலரும் தப்பிக்கும் முயற்சியில் உயரமான கட்டடங்களிலிருந்து விழுந்து சாகிறார்கள் அல்லது தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
இவற்றைத் தவிர, தலைமறைவாக இருந்தார்கள், தப்பிச் செல்ல முயன்றார்கள் என்பன போன்ற குற்றச்சாட்டின் பெயரில் பெண்கள் சிறைவைக்கப்படுகிறார்கள் என்று கார்டியன் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்காகச் செல்லும் பெண்களின் நிலைமை பற்றிப் பலவிதமான தகவல்கள் கூறப்படுகின்றன. இவற்றையெல்லாம் தங்கள் குடும்பத்தின் நலன், எதிர்காலம் கருதி, குறிப்பிட்ட ஆண்டுகள் சகித்துக்கொண்டு கழித்துவிட்டால் பிறகு நாடு திரும்பி நிம்மதியாக இருந்துவிடலாம் என்றே பெரும்பாலான பெண்கள் கடந்து வருகின்றனர் என்கின்றனர்.
வளைகுடா நாடுகளில் வந்திறங்கியதுமே எங்களுடைய கடவுச்சீட்டுகளை அவர்கள் (பணியமர்த்தும் நிறுவனங்கள்) எடுத்துக்கொண்டுவிடுவார்கள். பிறகு ஒரு வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள், ஒரு சிறிய அறையில் 8 அல்லது 9 பேர் தங்க வேண்டும். செல்போன்கள் பயன்படுத்த அனுமதியில்லை. யாராவது ஒருவர் எங்களை வாங்கும் வரை தரையிலேயே நாங்கள் படுத்துக் கிடக்க வேண்டியதுதான் என்று குறிப்பிட்டுள்ளார் ஒரு பிலிப்பின்ஸ் பெண்.
பலரும் உள்ளூரில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களைப் பார்த்துதான் விண்ணப்பிக்கின்றனர். இவர்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இடைத்தரகர்களாகச் செயல்படுகின்றனர். வளைகுடா நாடுகளுக்கு வந்தவுடனே வேலைக்குச் சென்றுவிட முடியும் என நினைத்துத்தான் பல பெண்கள் வருகின்றனர். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அவ்வாறு நடப்பதில்லை. வேலை அமையும் வரை பல மாதங்களுக்கு குறிப்பிட்ட ஆளெடுப்பு முகமைக்குச் சொந்தமான இடங்களில் மோசமான நிலைமைகளில்தான் அடைத்து வைக்கப்படுகின்றனர். செல்போனிலும் யாருடனும் தொடர்புகொள்ள முடியாது. இந்தக் காலகட்டத்தில் வீட்டுக்குப் பணம் அனுப்பவும் முடியாது, உண்மை நிலைமை பற்றித் தெரியப்படுத்தவும் முடியாது.
வளைகுடா நாடுகளில் பணிபுரிய பெண்கள் தேவை என்ற விளம்பரங்கள் பெரும்பாலும் அமீரகத்தைச் சேர்ந்த ஆளெடுப்பு நிறுவனங்களால் இணையதளங்களில்தான் வெளியிடப்படுகின்றன. பெண்களின் புகைப்படங்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது உள்பட அவர்களுடைய தனிப்பட்ட தகவல்களுடன் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. இதுபோன்ற ஆளெடுப்பு நிறுவனங்கள், அமீரகத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பெண்களின் நிலை பற்றித் தொடர்ச்சியாகப் பல தகவல்களை ‘தி கார்டியன்’ வெளிப்படுத்தி வருகிறது.
இந்தியாவிலிருந்தும் குறிப்பாகத் தமிழகம், கேரளத்திலிருந்து ஆண்களும் பெண்களுமாகப் பல்லாயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக, வளைகுடா நாடுகளுக்கு, ஏதேதோ வழிகளில், என்னென்ன வேலைகளுக்கோ செல்கிறார்கள்.
இவர்கள் எல்லாரும் என்ன நிலைமையில் இருக்கிறார்கள்? இதுபற்றி இந்திய அரசுக்கோ, குறிப்பிட்ட மாநிலங்களின் அரசுகளுக்கோ முழு விவரங்கள் தெரியுமா?
எவ்வளவு பேர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்? எந்தெந்த நாடுகளில் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள்? என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்பது பற்றி முழுவிவரங்களும் அரசுகளால் பராமரிக்கப்படுகின்றனவா?
வெளிநாடுகளுக்கு ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் வேலைகளுக்குச் செல்லலாம்தான். ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் பொருளாதாரத் தேவையும் பிழைப்புக்காக அவர்களை நாட்டை விட்டு வெளியேற வைக்கிறது, உலகம் முழுவதுமே.
வளைகுடா நாடுகளுக்கும் வேலைக்குச் செல்வதில் பிரச்சினையில்லை.
ஆனால், எந்த நாட்டுக்கு இவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள்?
அங்கே என்ன வேலை செய்யப் போகிறார்கள்?
யார் இவர்களைப் பணிக்கு வைத்திருக்கப் போகிறவர்கள்?
இவர்களுடைய பணிச் சூழல் எப்படி இருக்கும்?
இந்தப் பணிச்சூழலை உறுதிப்படுத்துவது யார்?
பெண்கள் பாலியல்ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாக மாட்டார்கள் என்ற பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்கிறதா?
இவர்களை எந்தச் சட்டம் பாதுகாக்கிறது?
தெரியவில்லை.
வளைகுடா நாடுகளில் ஏதேனும் ஒன்றில் விபத்து நடந்து உயிரிழப்புகள் நேரிடும்போதுதான் அந்த இடங்களிலெல்லாம் இவர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்த விஷயமே வெகுமக்களுக்குத் தெரிய வருகிறது. இறந்துபோன அவர்களுடைய உடல்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கே பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது.
இப்போதும் கேரளத்தில் அவ்வப்போது வளைகுடா நாடுகளில் பாதிக்கப்படும் பெண்கள் பற்றிய செய்திகள், வாட்ஸ்ஆப் காட்சிகள் வலம் வரத்தான் செய்கின்றன. ஆனாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறுகதையாக அப்படியே முடிந்துபோய்விடுகின்றன.
இன்றைய கணினிமயமான இணைய உலகில், இந்தியாவிலிருந்து, தமிழ்நாட்டிலிருந்து எவ்வளவு பேர் வெளிநாடுகளில் எங்கே, என்ன வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? எவ்வளவு ஊதியம்? என்ன நிலைமையில் இருக்கிறார்கள்? என்பதை எல்லாம் தொடர்ந்து கண்காணிக்கக் கூடியதாக – ஒற்றை பொத்தானில் ஒருவரைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்துகொள்ளக் கூடிய ஒரு தரவுத் தளத்தை உருவாக்க முடியாதா?
பிருத்விராஜ் நடித்து திரைப்படமாகவும் வெளிவந்த மலையாள நாவலான ஆடுஜீவிதத்தில் – கருவுற்றிருக்கும் மனைவியை விட்டுவிட்டு காசு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வளைகுடா நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலையில் பாலையில் ஆடுகளுடன் வாழ்க்கையைக் கழித்துப் பெரு முயற்சிக்குப் பின் உயிர் மட்டும் பிழைத்தாலே போதும் என்று தப்பிவர வாய்க்கப்பெற்ற – ஒரேயொரு நஜீப்பின் கதைதான் சொல்லப்படுகிறது.
ஒற்றை நஜீபைப் போல இன்னமும் எத்தனை பேர், பெண்கள், வீடுஜீவிதமாக இப்போதும் – இந்தக் கணத்திலும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ?