வெம்பக்கோட்டை அகழாய்வில் சீறும் காளை உருவத்துடன் சூதுபவள மணி கண்டெடுப்பு | Discovery of roaring bull figure near sattur

1299156.jpg
Spread the love

சாத்தூர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள மணியில் சீறும் திமிலுள்ள காளை உருவம் இன்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் கடந்த ஜுன் 18-ம் தேதி 3ம் கட்ட அகழ்வாய்வு பணி தொடங்கப்பட்டது. இதுவரை சங்கு, மாவு கல்லால் ஆன கழுத்தில் அணியக்கூடிய அணிகலனில் கீழே கோர்க்கப்படும் தொங்கணி, நாயக்கர் கால செம்பு நாணயம், சங்கு வளையல்கள் மற்றும் கழுத்தில் அணியும் சுடு மண்ணால் ஆன பதக்கம், கண்ணாடி மணிகள், கல்மணிகள் உள்ளிட்பட 650-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கார்னீலியன் என்று அழைக்கப்படும் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை உருவம் இன்று கண்டெடுக்கப்பட்டது. இது மோதிரத்தில் பதிக்கும் வகையில் உள்ளது. கடந்த இரு கட்ட அகழாய்வில் 15 சூதுபவள கல்மணிகள் கிடைத்தன. செதுக்கு முறையில் சீறும் திமிலுள்ள காளை உருவம் கிடைக்கப்பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.இப்பதக்கம் 10.6 மில்லி மீட்டர் சுற்றளவும் 3.6 மில்லி மீட்டர் தடிமனும் 60 மில்லி கிராம் எடையும் கொண்டது.

இதுவரையில் சுடுமண்ணால் ஆன திமில் உள்ள காளை உருவம் கிடைத்த நிலையில் தற்போது சூதுபவள கல்லில் திமிலுள்ள காளை உருவம் பொறிக்கப்பட்டது கிடைத்திருப்பது சிறப்பாகும். சூதுபவள மணிகள் செய்யக்கூடிய மூலக்கற்கள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டும் கிடைக்கின்றன.

இதுபோன்று கீழடி, சேரர் துறைமுக நகரமான முசிறி (பட்டணம்) அகழாய்வுகளில் சூதுபவள கல்மணியில் விலங்கின உருவம் பொறிக்கப்பெற்ற பதக்கங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. கீழடியில் காட்டுப்பன்றி உருவமும் முசிறியில் பாயும் சிங்கமும் கிடைக்கப் பெற்றுள்ளன. கீழடியிலும் முசிறியிலும் கிடைக்கப்பெற்ற சூதுபவள மணியால் ஆன பதக்கங்கள் சங்க காலத்தைச் சார்ந்தவை. அதேபோன்று வெம்பக்கோட்டையிலும் கிடைத்திருப்பது சிறப்பாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *