ஸ்ரீவில்லி. ஆவின் கூட்டுறவு பெயர்களை சட்டவிரோதமாக பயன்படுத்திய பால்கோவா கடைகளுக்கு நோட்டீஸ் | Palgova Stores Receive Notices for Misusing Aavin Name in Srivilliputhur

1374440
Spread the love

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவின், கூட்டுறவு பெயர்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி உள்ள பால்கோவா கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய உணவு பாதுகாப்புத் துறையினர் 14 நாட்களுக்குள் பெயர் பலகையை அகற்ற உத்தரவிட்டுள்ளனர்.

ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் பால்கோவா கடைகளில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி பால்கோவா கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் விளம்பர போர்டுகள் மற்றும் பாக்கெட்டுகளில் ஆவின், கூட்டுறவு மற்றும் அரசு முத்திரையை சட்ட விரோதமாக பயன்படுத்தி பால்கோவா விற்பனை செய்தது தெரியவந்தது.

அரசு நிறுவனங்களின் பெயர்களை முறைகேடாக பயன்படுத்துவது, உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி சட்டவிரோதம் மற்றும் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நடவடிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பால்கோவா கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

14 நாட்களுக்குள் ஆவின், கூட்டுறவு மற்றும் அரசு முத்திரை உள்ள பெயர் பலகையை அகற்றி, பால்கோவா பாக்கெட்டுகளில் உள்ள பெயரை நீக்க வேண்டும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் கூறுகையில்: தனியார் பால்கோவா கடைகளில் உணவு பாதுகாப்பு உரிமத்தில் குறிப்பிட்டுள்ள பெயரை விடுத்து, ஆவின், கூட்டுறவு மற்றும் அரசு முத்திரையை பயன்படுத்துவது சட்ட விரோதம் ஆகும். 14 நாட்களுக்குள் அரசு நிறுவன பெயர் மற்றும் முத்திரையை அகற்றக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. தவறும் பட்சத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *