சென்னை: “விவசாயம் இல்லாத 375 ஊராட்சிகள் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. முதல்வர் அனுமதி அளித்ததும் நகர்ப்புற உள்ளாட்சிகளும் வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 20) கேள்வி நேரத்தின்போது திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ., கே.மாரிமுத்து, “கோட்டூர் ஊராட்சியுடன் அருகில் உள்ள ஊராட்சிகளை இணைத்து பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, “நகர விரிவாக்கத்தின்போது அந்தந்த நகரத்தின் அருகில் உள்ள ஊராட்சிகள் இணைக்கப்படும். தமிழகம் முழுவதும் கணக்கெடுத்தபோது 750 ஊராட்சிகளை அருகில் உள்ள நகரத்துடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதுதொடர்பான குழுவிடம் ஊரக வளர்ச்சித் துறை எதிர்ப்புத் தெரிவித்ததால் 375 ஊராட்சிகளை சேர்க்க முடியவில்லை.
இதையும் சேர்த்திருந்தால் பேரூராட்சிகளின் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்திருக்கும். விவசாயம் இல்லாத 375 ஊராட்சிகள் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. முதல்வர் அனுமதி அளித்ததும் நகர்ப்புற உள்ளாட்சிகளும் வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.” என்று பதிலளித்தார்.
காவிரி ஆற்றில் தருமபுரி – சேலம் மாவட்டத்தை இணைக்கும் பாலம்: பேரவையில் பாமக எம்எல்ஏ. ஜி.கே.மணி பேசும்போது, “காவிரி ஆற்றில் தருமபுரி – சேலம் மாவட்டத்தை இணைக்கும் பாலம் அமைக்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, “தருமபுரி – சேலம் மாவட்டத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் பாலம் கட்டுவதற்கு பெரும் செலவாகும். அதுவும் இந்தப் பாலம் மற்ற பாலத்தைப் போல கட்ட முடியாது. மேட்டூர் அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் இந்த பாலத்தைக் கட்ட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக ரூ.2 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. அது கிடைத்ததும் முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்று இத்திட்டம் நிறைவேற்றப்படும்” என்று பதிலளித்தார்.