திருவாரூர்: தமிழகத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை நடத்தும் திட்டம் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில், சாயப்பட்டறைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் காரணமாக 18 வயது நிரம்பியவர்களுக்கு புற்றுநோய் பாதிக்கவாய்ப்புள்ளது. எனவே அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பரிசோதனை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் 18 வயது நிரம்பிய ஆண்களுக்கு வாய்ப்புற்று நோய், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன் பேசும் போது, “தற்போது காலியாக உள்ள மற்றும் 2026ல் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, புதிதாக 2,553 மருத்துவர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு வரும் ஜன. 27-ம் தேதி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வை டாடா கன்சல்டன்சி நிறுவனம் நடத்துகிறது.
இந்நிலையில், இந்த தேர்வை ஜனவரி முதல் வாரத்திலேயே நடத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் இது தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும். இந்த தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்ட 10 நாட்களில், 2,553 மருத்துவர்களுக்கும் பணியாணை வழங்கப்படும். அப்போது, தமிழகத்தில் ஒரு மருத்துவர் பணியிடம்கூட காலியாக இருக்காது” என்றார்.