4 ஆண்டுகளில் 70 கேங்மேன்கள் பலியானதாக வழக்கு: டான்ஜெட்கோ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | 70 people killed in last 4 years in power board gangmen case: TANGEDCO ordered to respond

1324229.jpg
Spread the love

சென்னை: கேங்மேன்களை தொழில்நுட்ப பணிகளுக்கு ஈடுபடுத்துவதால் தமிழக மின்வாரியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 பேர் பலியாகி உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், டான்ஜெட்கோ நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் பல்வேறு தொழில்நுட்ப பணிகளுக்கு திறன் சாராத கேங்மேன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 70 கேங்மேன்கள் மின் விபத்து ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மின் விபத்துகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நெல்லை மாவட்டத்திலும் கூட ஒரு கேங்மேன் பரிதாபமாக இறந்துள்ளார்.

கேங்மேன்களை இதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தரவை மின்வாரிய அதிகாரிகள் மதித்து நடப்பதில்லை. எனவே முறையான பயிற்சியும், போதிய தொழில்நுட்ப திறனும் இல்லாத பணியாளர்களை தொழில்நுட்ப பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என டான்ஜெட்கோவுக்கு உத்தரவிடக்கோரி சென்னை சிறுசேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டி.வெண்ணிலா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.பி. பாலாஜி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம் வேல்முருகன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *