பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 8 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் வெள்ளிக்கிழமை மாலை ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உடலை வாங்க மறுத்த கட்சித் தொண்டர்கள் பெரம்பலூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்பில் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி மனு அளித்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நாளை காலை 8.30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை மருத்துவமனையில் இருந்து பெற்றுக் கொண்ட கட்சியினர், அயனாவரத்திலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, பொது மக்களின் அஞ்சலிக்காக பெரம்பூரில் உள்ள பள்ளி மைதானத்தில் வைக்கவுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நாளை காலை நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.