முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நீண்ட நாள்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா உயிரிழந்தார். அவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து 2017 இல் உத்தரவிட்டார்.
இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், ”ஜெயலலிதா மரணத்தில் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.