“இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்தும்…” – பொங்கல் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து | Governor RN Ravi speaks about Pongal celebrations

1346679.jpg
Spread the love

திருச்சி: தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு, வானகம் நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம், எம்ஐடி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகியன இணைந்து ‘இயற்கை உழவர்களின் பொங்கல் விழா’ என்றத் தலைப்பில் பொங்கல் விழா திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள எம்ஐடி வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவி லட்சுமியுடன் சேர்ந்து புதுபானையில் புத்தரிசி போட்டு பொங்கல் வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தேவராட்டம், வள்ளி கும்மி ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளை ஆளுநர் ஆர்.என். ரவி, மனைவியுடன் கண்டு களித்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள பண்ணையில் வளர்க்கப்படும் கால்நடைகளை பார்வையிட்டார். அப்போது பசுமாட்டுக்கு பொங்கல், கரும்பு ஆகியவற்றை வழங்கினார்.

கல்லூரி வளாகத்தில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் பராமரிக்கும் தோட்டத்தினை பார்வையிட்டு பாராட்டினார். அங்கு வைக்கப்பட்டிருந்த முருகப்பெருமான் சிலைக்கு மாலை அணிவித்து பொங்கல் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டு ஆளுநர் மனைவியுடன் வழிபட்டார்.

அப்போது கரும்பு, பொங்கல் பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் உள்ள உள் அரங்கத்தில் இயற்கை வேளாண்மை செய்து வரும் உழவர் மற்றும் தொழில் முனைவோர்கள் 45 பேருக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் மேடையில், தமிழில் அனைவருக்கும் வணக்கம் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: நானும் எனது துணைவியும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறோம். இவ்விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. விவசாயிகள், உலக மக்கள் அனைவருக்கும் உணவு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். உணவு கொடுப்பதற்காக பிறந்தவர்கள். உணவு அளிக்க கூடிய நீங்கள் உயர்குலத்தை சார்ந்தவர்கள் என கூறுகிறேன். நாலடியாரில் அதற்கான குறிப்பு உள்ளது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன் 1 ஹெக்டேருக்கு 6 டன் அரிசி உற்பத்தி செய்தார்கள். அதன் பின் ஆங்கிலேயர்கள் செயற்கை உரங்களை தெளித்து மண்ணை நஞ்சாக்கினர்.

இதனால் மண் மலட்டு தன்மையாக மாறியது. நம்மாழ்வார் சொல்லிதான் மண் மலட்டுத்தன்மை என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள முடிந்தது. முதன் முதலில் உரம் வைத்த போது பயிர் நன்றாக வளர்ந்து உற்பத்தி பெருகியது. பின்னர் மண்ணின் தன்மை மலடாக மாறியதால் விவசாயம் குறைந்தது. இதை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நம்மாழ்வார் கூறியது போல வருங்காலங்களில் இயற்கை விவசாயதுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும். நாம் இயற்கை விவசாயித்துக்கு திரும்ப வேண்டும். வேளாண்மைதுறையில் முன்னோடியாக இருந்த பஞ்சாப் மாநிலம் இன்று நாட்டினுடைய விவசாய வருமானம் குறைந்த மாநிலமாக உள்ளது. இன்று வெளிமாநிலத்தில் அரிசி வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளபட்டது.

செயற்கை உரம், பூச்சி கொல்லி மூலம் விவசாயம் செய்ததால் தான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நமது பிரதமர் மோடி, 2030-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை கொண்டு வர முயற்சிக்கிறார். நாம் பிரதமருக்கும், இயற்கை விவாசயத்திற்க்கும் உறுதுணையாக இருப்போம்.

ட்ரோன்களை இயற்கை உரங்களை தெளிக்கப் பயன்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை இயற்கை விவசாயத்துக்கு உட்படுத்த வேண்டும்.

டிராக்டர் அறிமுகப்படுத்தபட்டபோது ராஜாஜி இது சாணி போடுமா என்று கேட்டார். அதற்கான காரணம் மாடு நாம் போடும் உணவை தின்றுவிட்டு அது போடும் சாணி எருவாக நமக்கு பயன்பட்டது. நவீன தொழில்நுட்பம் விவசாயத்தை அழிக்கும் வகையில் இருக்கக் கூடாது.

பாரம்பரிய கலாச்சாரத்தை மறந்து நாம் விவசாய முறைகளை மேற்கொண்டதன் காரணமாகத்தான் விவசாயம் நலிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கலாச்சார தொன்மையை நாம் பின்பற்ற வேண்டும். அதன் வழியே விவசாயம் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

தொடர்ந்து இயற்கை வேளாண்மை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கண்காட்சியினை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்து பார்வையிட்டார்.

விழாவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கு.ராமசாமி, தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் இரா.செல்வராஜ், எம்ஐடி கல்வி குழுமங்களின் துணைத் தலைவர் இ.பிரவீன்குமார், எம்ஐடி வேளாண் கல்லூரி முதல்வர் ரகுசந்தர், இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் வை.விஜயகணபதி, இயற்கை வேளாண்மை ஆய்வாளர்

ப்ரீத்தி மாரிமுத்து, திண்ணக்கோணம் பசுமை யோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆளுநர் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் வாழை கருப்பையா வரவேற்றார். வானகம் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.

ஆளுநர் வேலையை விட்டுவிட்டு விவசாயத்துக்கு திரும்ப ஆசை: ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘நான் வீட்டுக்கு வந்ததுபோல உணர்கிறேன். ஏனெனில் நானும் எனது மனைவியும் விவசாய குடும்பத்திலிருந்து வந்துள்ளோம். விவசாயிகளை சந்திக்கும்போதும், பண்ணைகளுக்கு செல்லும்போதும் எங்கள் வீட்டுக்கு சென்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் நடந்து வரும்போதும், காரில் வரும்போதும் ஏராளமான விவசாயிகள், விளைநிலங்களை பார்த்தோம். இதையெல்லாம் பார்த்தபோது, ‘இந்த வேலையை விட்டுவிட்டு விவசாயத்துக்கு திரும்பிவிடலாம் போல இருக்கிறது’ என்று எனது மனைவியிடம் தெரிவித்தேன். விவசாயம் தான் முழுதிருப்தியை தருகிறது’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *