உலக சாதனைக்கு முயன்ற இந்தியாவைச் சேர்ந்த சைக்கிள் வீரர் சிலி நாட்டில் சாலை விபத்தில் பலியாகியுள்ளார்.
தென் அமெரிக்க கண்டத்தில் அதிவேகமாக 10,000 கி.மீ. தூரத்தை சைக்கிளில் கடந்து உலக சாதனைப் படைக்க முயன்ற இந்திய வீரரான மோஹித் கோலி (வயது 36) கடந்த பிப்.12 சாலை விபத்தில் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜன.22 அன்று தனது சாதனை முயற்சிக்கான பயணத்தை கொலம்பியா நாட்டின் கார்டாகெனாவில் துவங்கிய அவர் பெரு, ஈக்வடார் ஆகிய நாடுகளைக் கடந்து தற்போது சிலி நாட்டில் தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், சிலியின் டமாருகள் மாகாணத்தின் தலைநகரான போஸோ அல்மோண்ட்டேவிலுள்ள அந்நாட்டின் மிக நீண்ட சாலையான ரூட் 5 இல் கடந்த பிப்.12 அன்று தனது சைக்கிளில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது, காலை 8.30 மணியளவில் அவ்வழியாக வந்த சிறிய பேருந்து ஒன்று அவர் மீது மோதியதில் அவர் சம்பவயிடத்திலேயே பலியானதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: காங்கோவில் 2வது விமான நிலையத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிப்படை?