விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கைதில்லி கேபிடல்ஸ் 19.3 ஓவர்களில் எட்டி முதல் வெற்றியை ருசித்தது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் லக்னௌ அணி வீரர்கள் பவுண்டரி கோட்டுக்கு வெளியே பறக்கவிட்டனர். இதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது.
இதையும் படிக்க : மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி: தில்லி கேபிடல்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!
அடுத்து களமிறங்கிய தில்லி அணியில் ஜேக் ஃப்ராசெர்-மெக்கர்க் 1, அபிஷேக் போரெல் ரன் ஏதும் எடுக்காமலும், சமீர் ரிஸ்வி 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, வெறும் 7 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்த தில்லி கேபிடல்ஸ் தோல்வியை தவிர்க்குமா? என்ற சந்தேகம் வலுத்தது.
எனினும், ஃபாஃப் டூ ப்ளெஸ்ஸிஸ் 29, கேப்டன் அக்சர் படேல் 22, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்கள் விளாசியபின் பெவிலியன் திரும்ப, தில்லி அணி 13 ஓவர்களுக்குள் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்களை சேர்த்து வெற்றியை நோக்கி மெல்ல நகர்ந்தது. ஆட்டமும் சூடுபிடித்தது.
நடுவரிசையில் களமிறங்கிய அஷுடோஷ் ஷர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்கள்(33 பந்துகளில்) திரட்ட, அவருக்கு பக்கபலமாக நின்ற விப்ராஜ் நிகாம் 15 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 39 ரன்களை விளாச ஆட்டம் தில்லி பக்கம் சாய்ந்தது.
எனினும், தில்லி அணியில் 9 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
கடைசி ஓவரில் தில்லி அணியின் வெற்றிக்கு 6 ரன்களே தேவைப்பட்ட நிலையில், கைவசம் ஒரேயொரு விக்கெட் மட்டுமே… இந்த நிலையில், பொறுப்புடன் விளையாடிய அஷுடோஷ் ஷர்மா அந்த ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட தில்லி கேபிடல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.