சென்னை: சென்னை கண்ணப்பர் திடல் பகுதி மக்களுக்கு பயனாளி கட்டண தொகை இன்றி வீடு வழங்க முயற்சி மேற்கொண்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உறுதியளித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகை அருகில் வசித்து வந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 2002-ம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிக்காக அகற்றப்பட்டன. இக்குடும்பங்கள் கண்ணப்பர் திடல் பகுதியில் அப்போது தங்க வைக்கப்பட்டனர். அன்று முதல் இன்று வரை, அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வீடு வழங்க மாநகராட்சி முன்வந்து, 114 குடும்பங்களை அடையாளம் கண்டு, பயோமெட்ரிக் பதிவு செய்தது. மூலக்கொத்தளம் பகுதியில் வீடு வழங்குவதாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உறுதியளித்தது.
ஆனால் தற்போது, பயனாளி கட்டண தொகை ரூ.4.75 லட்சம் செலுத்தினால் மட்டுமே வீடு ஒதுக்கீடு செய்ய முடியும் என்று வாரியம் தெரிவித்தது. இதை எதிர்த்து பயனாளிகள் குடும்பத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனை இன்று (ஆக.23) நேரில் சந்தித்து, இவர்களுக்கு பயனாளி கட்டண தொகை கேட்காமல் வீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, மனு ஒன்றை அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, இவர்களுக்கு பயனாளி கட்டணத் தொகை வசூலிக்காமல் வீடு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். ஒரு வாரத்தில் கட்டணம் வசூலிக்காமல் வீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் ஆணையர் குமரகுருபரன் உறுதியளித்துள்ளார். அப்போது கட்சியின் எழும்பூர் பகுதி செயலாளர் கே.முருகன், பகுதி குழு உறுப்பினர்கள் ஜெ.பார்த்திபன், எம்.வி.கிருஷ்ணன், வழக்கறிஞர் மோகன், கண்ணப்பர் திடல் மக்கள் டி.செல்வம், சுமதி, சுகந்தி ஆகியோர் உடனிருந்தனர்.