முடா வழக்கு: சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் (முடா), மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை எடுத்துக்கொண்டு நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியதில் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில், சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்து பிறப்பித்திருந்த உத்தரவை கா்நாடக உயா்நீதிமன்றம் செப். 24-ஆம் தேதி ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் ரூ.300 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. முடக்கப்பட்ட சொத்துகள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களில் உள்ளது என அமலாக்கத்துறை கூறி இருந்தது. கர்நாடக மாநிலம் முழுவதும் சித்தராமையாவின் நெருங்கிய கூட்டாளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று (ஜன. 27) கர்நாடக முதல்வரின் மனைவி பார்வதி, அமைச்சர் சுரேஷ் ஆகியோருக்கு ஜன.28ல் நேரில் அஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.