காஞ்சி கோயிலின் ரூ.8 கோடி மதிப்பிலான ‘சோமஸ் கந்தர்’ சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு – மீட்கும் பணி தீவிரம் | Kanchipuram Temple’ Somas Gandhar statue worth Rs 8 crore discovered in America

1319903.jpg
Spread the love

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான, 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘சோமஸ் கந்தர்’ வெண்கலச் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டறிந்துள்ளனர். ரூ.8 கோடி மதிப்புள்ள இந்த சிலையை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட பழங்கால சிலைகளை கண்டறிந்து மீட்கும் பணியில் தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி தினகரன் தலைமையிலான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக வடக்கு மண்டல சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தமிழ்செல்வி, அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸ்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் மியூசியத்தில் ஒரு வெண்கல சோமஸ் கந்தர் சிலை காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டறிந்தார். இந்த சிலையானது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலை சேர்ந்தது என்று அருங்காட்சியகம் நடத்துபவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதன் காலம் கி.பி.1500 முதல் 1600 க்குள் என்றும் இந்த உலோக சிலை வெண்கலத்தால் ஆனது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலையின் பீடத்தின் முன் பகுதியில் தெலுங்கு மொழியில் இந்த சிலையை தானம் செய்தவர் பெயர் பொறிக்கப்பட்டும், இந்த சிலை காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் (ஏகாம்பரநாதர்) கோயிலுக்காக செய்யப்பட்டது எனவும் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், சிலையின் பீடத்தில் தெலுங்கு மொழியில் நான்கு வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. அது கல்வெட்டு வல்லுநர்கள் உதவியுடன் மொழி பெயர்க்கப்பட்டதில், இந்த சோமஸ் கந்தர் சிலையானது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலைச் சேர்ந்தது உண்மையென உறுதிசெய்யப்பட்டது. இந்த சிலையின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.8 கோடி ஆகும். இந்த சிலையின் அமைப்பு மற்றும் எழுத்துக்களை பார்க்கும் போது இந்த சிலை 18-ம் நூற்றாண்டினை சேர்ந்ததாக இருக்கும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கண்டறியப்பட்ட சோமஸ் கந்தர் சிலை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோயிலில் இருந்து கொள்ளையர்களால் திருடப்பட்டு பின்பு அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் மியூசியத்தில் சர்வதேச கடத்தல்காரர்களின் உதவியுடன் விற்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. இந்த சிலையை மீட்கவும், அதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யும் பணியையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்டுள்ளனர். மேலும் இதே கோயிலைச் சேர்ந்த வேறு ஏதேனும் சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடத்தப்பட்ட சிலையை கண்டறிந்த போலீஸாரை டிஜிபி சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *