குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Kumari Ananthan funeral will be done with state honours: CM Stalin

1357492.jpg
Spread the love

சென்னை: மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார்.

கருணாநிதியை மேற்கோள் காட்டி.. முதல்வர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

குமரி மாவட்டத்தில் பிறந்து, பெருந்தலைவர் காமராசரின் அடியொற்றி, காங்கிரஸ் பேரியக்கத்துக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட அவரது மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும். அதனால்தான் கலைஞர் இதுகுறித்து குறிப்பிடும்போது, “தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழியை மாற்றி அமைத்துவிட்டார்” எனப் புகழாரம் சூட்டினார்.

தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்கு வாழ்ந்திட்ட அவரது பெருவாழ்வைப் போற்றி, அவருக்கு நமது அரசின் சார்பில் கடந்த ஆண்டு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி பெருமை கொண்டோம். விடுதலை நாள் விழாவில் அந்த விருதினை நான் வழங்கியபோது, என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு வாஞ்சையோடு உறவாடிய அவரது நினைவு என் கண்களில் கண்ணீரைப் பெருக்குகிறது.

ஏராளமான நூல்களையும் – எண்ணற்ற மேடைகளையும் கண்ட அவரது தமிழால் நம் நெஞ்சங்களில் அவர் என்றும் நிறைந்திருப்பார் என ஆறுதல் கொள்கிறேன்.

‘தகைசால் தமிழர்’ குமரி அனந்தன் மறைவால் வாடும் அருமை சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள், காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள், அரசியல் மற்றும் இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த சொந்தங்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி: இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசித்து சட்டப்பேரவை உறுப்பினர்களை மவுன அஞ்சலி செலுத்தக் கோரினார். அதன்படி சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதல்வர் நேரில் அஞ்சலி: தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட குமரி அனந்தன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜனிடம் பேசி ஆறுதல் கூறினார்.

அரசு மரியாதை: “தமிழே தன் மூச்செனத் தமிழ் திருப்பணி செய்த குமரி அனந்தன் திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவுற்ற செய்தியை அறிந்து முதல்வர் தனது வேதனையையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்ச் சமுதாயத்துக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய அவருக்கு கடந்த ஆண்டு தமிழக அரசு ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கி கவுரவித்தது.

தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்காக வாழ்ந்திட்ட குமரி அனந்தன் பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *