குமரி தனியார் கல்லூரியின் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நிறுத்தம் | Admission of 100 MBBS seats of Kumari Private College has been stopped

1303229.jpg
Spread the love

சென்னை: கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் ஆராய்ச்சி மையம் கல்லூரியின் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதால், அங்கு தற்காலிகமாக செய்யப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்து, திருத்தப்பட்ட இறுதி இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த கல்லூரியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீட்டு ஆணைகள் பெற்ற 5 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேறு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான ஆன்லைனில் பொது கலந்தாய்வு கடந்த 21-ம் தேதி தொடங்கியது. அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 28,819 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசையில் இடம்பெற்றுள்ள 13,417 பேரும் ஆன்லைனில் பதிவு செய்து கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்வது கடந்த 27-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தற்காலிக இடஒதுக்கீடு விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிலையில், இறுதி இடஒதுக்கீடு விவரங்கள் https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் இன்று (ஆக.30) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இன்று தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்துக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய கடிதத்தில், “கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் ஆராய்ச்சி மையம் கல்லூரி வளாகம் அமைந்துள்ள நிலத்துக்கு உரிமை கோரி மனுதாரர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதால், அக்கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட 100 எம்பிபிஎஸ் இடங்களை நிறுத்தி வைக்கப்படுகிறது. அதனால், அந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், முன்னதாகவே அந்த கல்லூரியின் 95 இடங்கள் தற்காலிக ஒதுக்கீடாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மேலும், 5 இடங்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில், 95 இடங்கள் திரும்பப் பெறப்பட்டு, புதிய இறுதி ஒதுக்கீட்டு பட்டியல் இன்று இரவு வெளியிடப்பட்டது. அதேநேரம், அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு வேறு கல்லூரிகளில் இடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி ஒதுக்கீடு பெற்றவர்கள் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும் என்று மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *