தங்கம் விலை தீபாவளிக்குப் பின் குறையுமா?

Dinamani2f2024 10 232fwmzi3c5o2fgoldchaingilr.jpg
Spread the love

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, ஆபரணத் தங்கம் விலை விறுவிறுவென ஏறி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை தீபாவளிக்குப் பிறகு குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.40 உயர்ந்து, ரூ.7,340க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கும் விற்பனையாகிறது.

இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.8000 ஆக உயரும் அபாயம் இருப்பதாக செய்திகள் பரபரப்பப்படுகின்றன. இது உண்மைதானா? இல்லை தீபாவளிக்கு, தொழிலாளர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கொடுக்கும் போனஸ் தொகையை பலரும் தங்கம் வாங்குவார்கள் அல்லது வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தங்கம் விலை ஏறிக்கொண்டே செல்கிறதோ என்று தெரியவில்லை.

அக். 1ஆம் தேதி ஏழாயிரத்தைத் தொட்ட தங்கம் விலை தற்போது ஒரு மாத காலத்துக்குள் ஒரு கிராமுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து எட்டாயிரத்தைத் தொடுவதெல்லாம் ஏழை மக்களுக்கு நல்லதல்ல என்றாலும், அப்படித்தான் நடந்து வருகிறது.

தங்கம் என்றால், வெறும் நகைகள் மட்டுமல்ல, தங்க நாணயங்களையும் பலரும் வாங்கி சேமிக்கத் தொடங்கி விட்டார்கள். தங்கம் விலை எப்படியும் உயர்ந்துகொண்டே செல்வது, சேமிப்பை தங்கம் மீது திருப்புவதற்கு முக்கிய காரணமாகிறது.

இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் மட்டும் 10 மற்றும் 11ஆம் தேதிகளைத் தவிர்த்து தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்துள்ளது தங்கம் விலை. சில நாள்களில் மிகச் சிறிய தொகை மட்டுமே குறைந்திருந்தது.

தங்கம் விலை குறித்து வியாபாரிகள் கூறுகையில், தீபாவளிக்குப் பிறகு ஓரளவுக்கு தங்கம் வலை குறையும் என்று எதிர்பார்ப்பதாகவே கூறுகிறார்கள். இதனை நம்பி, தீபாவளி வரை தங்கம் வாங்குவதை தள்ளிப்போடலாமா? அல்லது இப்போதே வாங்கிவிடுவது நல்லதா என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.

இது குறித்து பங்குச் சந்தை மற்றும் வணிகம் தொடர்பான விவரங்களை அளித்து வரும் ஆனந்த் சீனிவாசன், ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த சில நாள்களாகவே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட குறையவில்லை. ஒரு வாரத்தில் என்று கணக்கெடுத்தால் ரூ.200க்கும் மேல் உயர்ந்துதான் உள்ளது.

இனி தலைப்பே.. தங்கம் விலை எட்டு ஆயிரம் என்று வைத்துவிடுவார்கள். ரூ.8,500 வரை 24 கேரட் ஏறும் வாய்ப்பு உள்ளது.இதனால், தங்கம் வாங்கணும்னு நினைச்சா ரூ.8000க்குள்ள கிடைக்குமா? என்று தெரியவில்லை. 22 கிராம் தங்கம் ஏற்கனவே ரூ.7964க்கு விற்கிறது. அதற்கு மேல் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்தால் 8 ஆயிரம் ஆகிவிடும்.

ஒரு பக்கம் 24 கேரட் தங்கம் ரூ.8500 போனால், 22 கேரட் தங்கம் விலையும் ரூ.1000 அளவுக்கு அதிகரிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதனால, தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தால், இதுதான் சரியான நேரமாக இருக்கும். அதற்குப்பிறகு ரூ.8000க்குள் ஒரு கிராம் கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. இது தங்கம் பற்றிய எனது செய்தி என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *