நடிகை தமன்னா இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த விஜய் வர்மாவைப் பிரிந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இவர்கள் பிரிவுக்குக் காரணம் திருமணம் தொடர்பான முடிவுதான் என்று கூறப்படுகிறது.
வெகு நாள்களாக திரையுலகில் நடித்தாலும், சிங்கிளாகவே இருந்து வந்த தமன்னா, அண்மையில்தான் விஜய் வர்மாவை காதலராக அறிவித்தார். பொது வெளியிலும் இருவரும் ஒன்றாக வலம் வந்தனர். விரைவில் இவர்களுக்கு கெட்டிமேளம் கொட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இவர்கள் பிரிவதாக முடிவு செய்துள்ளனர்.
தற்போது இருவருமே தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை டெலிட் செய்துவிட்டதாகவும் இதன் மூலம் இவர்களது பிரிவு உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நடிகை தமன்னா முன்னணி கதாநாயகர்களுடன் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
இவரும் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவும் கடந்த 2023 முதல் காதலித்து வந்தனர். இருவரும் லஸ்ட் ஸ்டோரிஸ் – 2 என்ற இணையத் தொடரில் இணைந்து நடித்தபோது நட்பாகி, அது காதலாக மாறியது.
இவர்கள் பொது வெளியில் தங்கள் பிரிவு குறித்து அறிவிக்கவில்லை என்றும், நண்பர்களாகத் தொடர முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே பிரிவுக்குக் காரணங்கள் என்ற பல புரளிகளும் தகவல்களும் பரவிக்கொண்டேதான் இருக்கிறது. இன்னும் சில நாள்களுக்கு இது தொடரும்தான். ஆனால் ஒரு தகவல் மட்டும் தற்போது காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது அது, 35 வயதாகும் தமன்னா, விரைவாக திருமணம் செய்துகொண்டு வாழ்வில் செட்டில் ஆக வேண்டும் என்று விரும்பியதாகவும் ஆனால் விஜய் வர்மாவோ இப்போதைக்கு திருமண பந்தத்துக்குள் நுழைய விரும்பாமல், தமன்னாவின் விருப்பத்துக்கு மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இருவருக்குள்ளும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இன்று பிரிவது என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.