“தென்மாநிலங்களை தண்டிப்பதை ஏற்கமாட்டோம்!” – பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் உறுதி | MK Stalin about southern states and delimitation on his birthday

1352506.jpg
Spread the love

சென்னை: “நாட்டினுடைய வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள்! அப்படி நடந்தால், அதைத் தமிழ்நாடும் திமுகவும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளையொட்டி விடுத்துள்ள செய்தியில், ““பொதுவாக நான் பிறந்தநாளைப் பெரிய அளவில் ஆடம்பரமாக, ஆர்ப்பாட்ட விழாவாகக் கொண்டாடுவது இல்லை. ஆனால், திமுக தொண்டர்கள், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அரசின் சாதனைகள் மற்றும் கட்சிக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது என்று செயல்படுவார்கள்.

இந்த முறை, என்னுடைய பிறந்தநாள் வேண்டுகோளாக, என் உயிரோடு கலந்திருக்கும் திமுக தொண்டர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இன்றைக்குத் தமிழ்நாடு தன்னுடைய உயிர்ப் பிரச்சினையான மொழிப்போரையும், தன்னுடைய உரிமைப் பிரச்சினையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது. இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள், மக்களிடம் கொண்டு சேர்க்கக் கேட்டுக் கொள்கிறேன்.

தொகுதி மறுசீரமைப்பு என்பது நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூக நீதி, நம்முடைய சமூக நலத்திட்டங்களைப் பெரிதும் பாதிக்கும். இதை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தைத் தொடங்கினோம். இப்போது கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவுக் குரல் வந்துள்ளது.

இதைப் பார்த்த ஒன்றிய அரசு, இந்தியைத் திணிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், நமக்கான நிதியையும் இன்னும் தரவில்லை. அதேபோல், “தமிழ்நாட்டுக்கான தொகுதிகளைக் குறைக்க மாட்டோம்” என்று மட்டும்தான் சொல்கிறார்களே தவிர, மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை!

நாம் கேட்பது, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரிக்காதீர்கள்! நாட்டினுடைய வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள்! அப்படி நடந்தால், அதைத் தமிழ்நாடும் திமுகவும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!

நாம் ஒரு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டுக்காக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *