“நாதக-வில் சேரும்போது செல்வந்தர்கள்… இன்று நாங்கள் தினக்கூலிகள்!” – கிருஷ்ணகிரி நிர்வாகி வேதனை | We were rich when we joined naam tamilar Now we are daily wage earners says ntk cadre

1319892.jpg
Spread the love

கிருஷ்ணகிரி: “நாம் தமிழர் கட்சியில் சேரும்போது செல்வந்தர்களாக இருந்தோம். கட்சி, பொதுக்கூட்டம், நிர்வாக செலவுகளுக்காக அவற்றை இழந்து இன்று தினக்கூலிகள் ஆகிவிட்டோம்” என அக்கட்சியின் கிருஷ்ணகிரி மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிருஷ்ணகிரியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “நான் உட்பட ஊத்தங்கரை தொகுதிச் செயலாளர் ஈழமுரசு, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ஐயப்பன், கிருஷ்ணகிரி தொகுதி தலைவர் திருமூர்த்தி, பர்கூர் தொகுதி செயலாளர் அப்துல் ரகுமான், கிருஷ்ணகிரி, கிழக்கு மாவட்டச் செயலாளர் காசிலிங்கம், ஒன்றியச் செயலாளர் செல்வா உட்பட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சி செயல்பாடுகளில் இருந்து விலகி உள்ளோம். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த இக்கட்சி, 2019-க்கு பின்னர் மாறிவிட்டது. மாநில பொறுப்பாளர்கள் பலர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டனர்; பலர் வெளியேறினர். மதுரை, சென்னை, சேலம், தஞ்சை, ராமநாதபுரம் பகுதிகளில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறிவிட்டனர்.

ஆனால், அதைப் பற்றி எல்லாம் சீமானுக்கு கவலையில்லை. நாங்கள் கட்சியில் சேரும்போது செல்வந்தர்களாக இருந்தோம். கட்சி, பொதுக்கூட்டம், நிர்வாக செலவுகளுக்காக அவற்றை இழந்து இன்று தினக்கூலிகளாகிவிட்டோம். பலரது எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளோம். ஆனால், திமுக, அதிமுகவினர் உள்பட பணம் படைத்தவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தான் சீமான் செல்கிறார். எங்களை மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை; அவர் எங்களை அடிமைகளாக்கி உள்ளார். மேலும், கட்சி செயற்குழு, பொதுக்குழு கூட்டம் என நடத்தி அவரே பேசி, அவரே முடிவெடுத்துக் கொள்கிறார்.

அவரை விமர்சித்த பாரதிசெல்வனை கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கிறார். கட்சிக்காக, 15 ஆண்டுகள் உழைத்தவர்களை மறந்துவிட்டார். நாதக-வால் இன்னும், 50 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரமுடியாது. எங்களை யாரும் இன்னும் கட்சியிலிருந்து நீக்கவில்லை. இருப்பினும் கட்சியில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள வலிகளை மட்டுமே நாங்கள் கூறுகிறோம். கட்சியிலிருந்து விலகிச் சென்ற மாநில நிர்வாகிகளை ஒன்றிணைத்து, சீமான் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்று சேர்க்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் தமிழ் தேசிய வளர்ச்சிக்காக போராடும் கட்சிகளுடன் சேருவது அல்லது புதிய அமைப்பை உருவாக்குவது என்ற முடிவில் உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *