பாடி முதல் திருநின்றவூர் வரை சி.டி.ஹெச். சாலை விரிவாக்கம்: 5 உயர்நிலை மேம்பாலங்களுடன் 6 வழிப்பாதை

Dinamani2f2025 01 262f3bxooniz2fdinamaniimport2022119originalambtatturstation.avif.avif
Spread the love

ஆவடி: பாடி முதல் திருநின்றவூர் வரை சி.டி.ஹெச். சாலை 100 அடி அகலத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மேலும், அம்பத்தூர் பகுதியில் 5 உயர்நிலை மேம்பாலங்களுடன் 6 வழிச் சாலையாக அமைக்கப்படுகிறது என அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர், திருத்தணி வழியாக திருப்பதிக்கு சிடிஹெச் சாலை செல்கிறது. இந்தச் சாலையை சுற்றியுள்ள பகுதியில் பொறியியல், கலைக் கல்லூரிகள், பள்ளிகள், தொழிற்சாலைகள், அரசு, தனியார் நிறுவனங்கள், பாதுகாப்பு துறை தொழிற்சாலைகள் உள்ளிட்டவை உள்ளன.

இந்தச் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், சிடிஹெச் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

இந்தச் சாலை மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பாடி முதல் திருநின்றவூர் வரை உள்ள சிடிஹெச் சாலையை அதிகாரிகள் முறையாகப் பராமரிப்பதில்லை. பல இடங்களில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டு குறுகிப் போய் இருப்பதாக புகார்கள் உள்ளன.

இந்தச் சாலையை கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் விரிவுபடுத்தப் போவதாக அரசு கூறியும், அதற்கான பணிகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தினமும் எண்ணிலடங்கா துன்பங்களைச் சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜோசப் சாமுவேல் கூறியது:

பாடி முதல் திருநின்றவூர் வரை சிடிஹெச் சாலை கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட நிலையில், பொதுமக்கள் கோரிக்கைப்படி சாலை விரிவுபடுத்தும் திட்டம் 160 அடியாக குறைக்கப்பட்டு, 6 வழிச் சாலையாக அறிவிப்புகள் வெளியாகின. இதற்கு பொதுமக்களும் வியாபாரிகளும் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால், இறுதியாக இந்தத் திட்டம் 6 வழிச் சாலையுடன் 100 அடி அகலத்தில் அமைக்கப்படுகிறது.

இந்த நிலம் கையகப் பணிகளுக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு செய்ய நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சி.டி.ஹெச். சாலை – கொரட்டூர் சந்திப்பு, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் சந்திப்பு, அம்பத்தூர் தொலைப்பேசி நிலையம் சந்திப்பு, வானகரம் சாலை சந்திப்பு, அம்பத்தூர் ரயில்வே மேம்பாலம் ஆகிய 5 இடங்களில் உயர்நிலை மேம்பாலங்கள் அமைய உள்ளன.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இன்றி விபத்துகள் ஏற்படாத வகையில், பல்வேறு வசதிகளுடன் சாலை அமையும்.

இந்தப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *