“பிளவுவாத சக்திகளும், ஊழல் மலிந்த அரசியலும் தான் நம் எதிரி” – தவெக மாநாட்டில் விஜய் பேச்சு | Separatist and corrupt politics are our enemy tvk leader Vijay

1331994.jpg
Spread the love

விக்கிரவாண்டி: “பிளவுவாத சக்திகளும், ஊழல் மலிந்த அரசியலும் தான் நம் எதிரி” என்று தவெக முதல் மாநில மாநட்டில் அதன் தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் – விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் சிறப்புரை ஆற்றினார்.

தன் பெற்றோரிடம் ஆசி பெற்ற பிறகு விஜய் உரையை தொடங்கினார். “பால் மனம் மாறாமல் இருக்கும் குழந்தைக்கு தாயின் பாச உணர்வை சொல்ல தெரியாது. அந்த குழந்தைக்கு பாம்பை கண்டாலும் ஏற்படும் அந்த பய உணர்வை சொல்லத் தெரியாது. அது தாயை பார்க்கின்ற அதே சிரிப்போடு தான் பாம்பை பிடித்தும் விளையாடும். இங்க அந்த பாம்பு அரசியல். அதை பிடித்து விளையடும் குழந்தை நான்.

அரசியலில் கவனமாக தான் களமாட வேண்டும். அனைவருக்கும் எனது உயிர் வணக்கங்கள். நாம் அனைவரும் ஒன்று. நான் மற்ற கட்சி தலைவர்களை குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பமும் தான் மாற்றம் காண வேண்டுமா? அரசியலிலும் மாற்ற வேண்டும்.

இந்த மண்ணுக்காக வாழ்ந்தவர்கள் தான் நமது கொள்கை தலைவர்கள். அந்த வகையில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோர் தவெக-வின் கொள்கை தலைவர்கள். பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்பதால் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

நம்மை பார்த்து யாரும் விசிலடிக்கும் கூட்டம் என சொல்லக்கூடாது. நாம் விவேகமாக செயல்பட வேண்டும். நமது வலிமையை அதில் காட்ட வேண்டும். வெறுப்பு அரசியலை ஒருபோதும் கையில் எடுக்க மாட்டோம். சொல் முக்கியமில்லை செயல் தான் முக்கியம். அரசியலில் சமரசத்தத்துக்கோ, சண்டை நிறுத்தத்துக்கோ இடமில்லை. நமது அரசியல் நிலைப்பாடு தான் நமது எதிரி யார் என்பதை காட்டும். பிளவுவாத சக்திகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியலை எதிர்ப்பதும் தான் நமது கொள்கை.

இந்த ஊழல்வாதிகள் கபடதாரிகள். கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடுவார்கள். தமிழகத்தில் சாதி இருக்கும். ஆனால் அது அமைதியாகவே இருக்கும். மக்களுக்காக நிற்பது தான் எங்கள் கொள்கை. நாங்கள் மாற்று அரசியல் என சொல்லி ஏமாற்றப் போவதில்லை. நான் எக்ஸ்ட்ரா லக்கேஜாக இங்கு வரவில்லை. தமிழகத்தை முதன்மையாக மாற்றுவதே நம் நோக்கம். இதிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை.

நாங்கள் சமூக வலைதளத்தில் கம்பு சுத்த வந்தவர்கள் அல்ல; மக்கள் நலனுக்காக வாள் ஏந்த வந்தவர்கள். அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பிறரை அடி பணிய வைக்க மாட்டேன். தமிழகத்தின் வளர்ச்சியை எதிர்பார்த்து இருக்கும் மக்களுக்காக உங்களில் ஒருவனாக அரசியலில் களம் கண்டுள்ளேன்.

எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் அளிக்க உள்ள தவெக-வுக்கு செலுத்த உள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும். திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்ன தான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும் எங்களிடம் அது எடுபடாது. பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி. பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல் எதிரி. அவர்கள் செய்வது பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?

திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது இரு கண்கள். தகுதி இருந்தும் நீட் தேர்வு தடையாக உள்ளது. எனது சகோதரி வித்யாவை இழந்த போது ஏற்பட்ட அதே வலியை சகோதரி அனிதாவை உயிரிழந்த போதும் நான் பெற்றேன்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். நான் கூத்தாடி தான். அரசியலுக்கு எம்ஜிஆர், என்டிஆர் வந்த போதும் கூத்தாடிகள் என்று தான சொன்னார்கள். கூத்து என்பது இந்த மண்ணோடும் மக்களுடன் கலந்து. நான் உங்களில் ஒருவன். கூட்டணியில் இடம்பெறுவோருக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிங்கப்படும்” என அவர் பேசினார். 45 நிமிடங்களுக்கும் மேல் விஜய் உரையாற்றினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *