பூண்டி ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றுக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Flood warning issued for people along the Kosasthalai River

1344786.jpg
Spread the love

திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து, மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த உபரி நீர், விநாடிக்கு ஆயிரம் கன அடி என திறக்கப்பட்டு வருவதால், நீர் வள ஆதாரத் துறை, கொசஸ்தலை ஆற்றுக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்கும் பூண்டி ஏரிக்கு வடகிழக்கு பருவ மழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து மழை நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு வரும் மழைநீர் மிக அதிகளவில் வந்ததால், கடந்த 12-ம் தேதி முதல், 18-ம் தேதிவரை பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்தது. அதுமட்டுமல்லாமல், ஆந்திர மாநிலம்- கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து நேற்று இரவு முதல், இன்று காலை வரை விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அவ்வாறு அதிகரித்து வரும் நீர் வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,290 கன அடியாக உள்ளது.

ஆகவே, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 3,121 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம், 34.92 அடியாகவும் உள்ளது. எனவே, பூண்டி ஏரியின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 16 மதகுகள் கொண்ட இந்த ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீரை இன்று காலை 9 மணியளவில் நீர் வள ஆதாரத் துறையினர் திறந்தனர்.

இரு மதகுகளில் விநாடிக்கு ஆயிரம் கன அடி என திறக்கப்பட்டுள்ள இந்த உபரி நீர், ஏரிக்கு வரும் நீர் வரத்தின் அளவை பொறுத்து, படிபடியாக அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என, நீர் வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீர், தாமரைப்பாக்கம், காரனோடை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 65 கி.மீ., பயணித்து, எண்ணூர் பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கும்.

ஆகவே, பூண்டி ஏரியில் வெளியேற்றப்படும் உபரி நீர் வெளியேறுவதால், கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்களில் உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது நீர்வள ஆதாரத் துறை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *