ராஜீவ் கௌபா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து டி.வி.சோமநாதன் மத்திய அமைச்சரவை செயலராகக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜீவ் கெளபாவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அந்த பொறுப்புக்கு டி.வி.சோமநாதன் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இன்று பொறுப்பேற்றுள்ள டி.வி.சோமநாதன் புதிய செயலராக அடுத்த இரண்டு ஆண்டு காலத்துக்கு செயல் பட உள்ளார்.
டாக்டா். டி.வி. சோமநாதன் (59), 1987ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) தமிழ்நாடு பிரிவைச் சோ்ந்தவா். இவர், மத்திய அரசுப் பணியில் நிதி மற்றும் செலவினங்கள் துறை செயலா், பிரதமா் அலுவலக கூடுதல் செயலா் (2015-2017), காா்பரேட் விவகாரங்கள் துறை இணைச் செயலா் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளாா்.
இதேபோல, தமிழக அரசிலும் துணைச்செயலா் (நிதிநிலை), இணை கண்காணிப்பு ஆணையா், குடிநீா் வாரிய செயல் இயக்குநா், முதல்வரின் செயலா், வணிவரித்துறை கூடுதல் தலைமை செயலா் மற்றும் ஆணையா் ஆகிய பதவிகளையும் பொதுத்துறையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதலாவது நிா்வாக இயக்குநா் பதவியையும் வகித்துள்ளாா்.