விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் அளிக்காவிட்டாலும் விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கும் திமுக | DMK will closely monitor Vijay subsequent activities

1335012.jpg
Spread the love

சென்னை: தவெகவின் முதல் மாநாட்டில் நடிகர் விஜய்யின் பேச்சு மற்றும் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதிலும், நேரடியாக பதிலளிக்காமல் நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகளை உன்னிப்பாக திமுக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆளும் திமுக, அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகி வருகிறது. அடுத்து வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளை இலக்காக வைத்து களம் காண, முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கட்சியினரை அவ்வப்போது சந்தித்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல், சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் என இரண்டு மட்டுமின்றி, முன்னதாக நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் திமுக தமிழகத்தில் தனது இருப்பை அழுத்தமாக நிரூபித்து காட்டியுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பலவீனத்தையும், தங்கள் கூட்டணியின் பலத்தையும் நம்பியே அடுத்த தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகி வந்தது. இந்நிலையில்தான், சமீபத்தில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இம்மாநாட்டில், நடிகர் விஜய் நேரடியாகவே திமுகவை விமர்சித்ததுடன், திமுகதான் தனது அரசியல் எதிரி என்பதையும், திராவிட மாடலை குறிப்பிட்டு பேசினார். கொள்கை அளவில் பாஜகவை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆட்சியில் பங்கு குறித்து திமுக கூட்டணிக் கட்சிகள் மத்தியில் சமீபத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தங்களுடன் கூட்டணி வைத்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. ஆனால், அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்ட சிலரைத் தவிர திமுகவின் வேறு முக்கியத் தலைவர்கள் யாரும் பெரிய அளவில் விஜய் விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றவில்லை. அதன்பின் நடைபெற்ற திமுக தேர்தல் பார்வையாளர்கள் கூட்டத்திலும், நடிகர் விஜய் விமர்சனம் குறித்து யாரும் பேச வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் கூறிவிட்டதாகவும், அதனால் யாரும் இதுகுறித்து பேசமாட்டோம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர்.

ஆனால், அதன்பின் நேற்று நடைபெற்ற தவெகவின் செயற்குழு கூட்டத்திலும், அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, மக்கள் விரோத சக்திகள் பயன்படுத்தும் அணுகுமுறையை ஆளும் திமுக உள்ளிட்ட யார் செயல்படுத்தினாலும் தவெக எதிர்ப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: திமுகவுக்கு முக்கியமான எதிரி தமிழகத்தில் அதிமுகதான். விஜய் தற்போது முதல் மாநாட்டை நடத்தியுள்ளார். அதன்பின் செயற்குழு கூட்டத்தையும் நடத்தியிருக்கிறார். அவரது அடுத்தடுத்த செயல்பாடுகளைப் பார்த்துதான் தலைமை எதிர்வினையாற்றும். இப்போதைய சூழலில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் தலைமை இறங்கியுள்ளது.

முதல்வரும், துணை முதல்வரும் தங்கள் சுற்றுப்பயணங்கள் மூலம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின், டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் கட்சியின் நிர்வாக ரீதியான மாவட்டங்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும். இவ்வாறு கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *