விழுப்புரம் மாவட்டத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Dinamani2f2024 12 252ftl2bsz3d2fvpm1.jpg
Spread the love

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை இரவு முதல் களைகட்டியது. தேவாலயங்களில் புதன்கிழமை அதிகாலை வரை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த நாளை ஆண்டுதோறும் டிச. 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவா்கள் கொண்டாடி வருகின்றனா். அந்த வகையில், நிகழாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே, கிறிஸ்தவா்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திர வடிவிலான விளக்குகளையும், இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததைக் குறிக்கும் வகையிலான குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்களை அமைத்து அதில் வண்ண விளக்குகளையும் ஒளிரவைத்து பண்டிகைக்கு தயாராகி வந்தனா்.

இந்த நிலையில், விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவிலிருந்தே கொண்டாட்டம் களைகட்டியது. இதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பெரும்பாலான தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு மேல் விழுப்புரம்-கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது இயேசு பிறந்தார் என்பதை எடுத்துக் கூறும் விதமாக குழந்தை இயேசு சொரூபம் அனைவரிடமும் காண்பிக்கப்பட்டு குடிலில் வைக்கப்பட்டது.

இதுபோன்று விழுப்புரம் நகரிலுள்ள சி.எஸ்.ஐ. தூயஜேம்ஸ் தேவாலயம், சேவியர் காலனி தூய பவுல் மிஷனரி ஆலயம், டி.இ.எல்.சி. ஆலயம் உள்ளிட்ட அனைத்துத் தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிக்காக குடில் அமைக்கப்பட்டு, கிறிஸ்து பிறப்புப் பாடல்களை பாடியபடி குழந்தை இயேசு சொரூபத்தை குடிலில் வைத்து ஆராதனை நடத்தினர்.

இதையும் படிக்க | கிறிஸ்துமஸ்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து

விழுப்புரம் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் மற்றும் ஆராதனைகளில் பங்கேற்றோர்.

தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள்,பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடைகளை அணிந்து பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை முடிந்த பின்னர் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கேக்குகளை பரிமாறியபடி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

புதன்கிழமை காலையிலும் பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.

இதுபோன்று விக்கிரவாண்டி, காணை, கண்டமங்கலம், ஆரோவில், மரக்காணம், கோட்டக்குப்பம், வளவனூர், முகையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இதுபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகரம், கெடிலம் போன்ற பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *