மதுரை: மதுரை மாநகராட்சியில் ஆணையர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நிர் வாகம் தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சியாக இருந்த மதுரை கடந்த 1971-ம் ஆண்டு மே 1-ல் மாநகராட்சியாக மாறியது. 72 வார்டுகள் இருந்தநிலையில், கடந்த 2011-ம் ஆண்டு மாநகராட்சியுடன் 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு வார்டுகள் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டது.
இணைக்கப்பட்ட புறநகரின் 28 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கே 14 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போதுதான் புதிய பாதாள சாக்கடை, புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடிப்படை வசதிகள் செய்யாமலேயே சொத்து வரி மட்டும் பழைய மாநகராட்சி 72 வார்டுகளுக்கு இணையாக நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் புதிதாக மேலும் 16 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக் கப்பட உள்ளது. இந்த விரிவாக்கம் மூலம் வார்டுகள் எண்ணிக்கை 120 ஆக உயரவிருக்கிறது. மாநகராட்சியுடன் சுற்றிலும் உள்ள ஊராட்சிகளை இணைப்பது மட்டுமே குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கிறது.
ஆனால், இணைக்கப்படும் புறநகர் ஊராட்சி களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில்லை. மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டல அலுவலகங்களில் உள்ள உதவி ஆணையர்கள் முதல் ஆணையர் வரை அடிக்கடி மாற்றப்படுவது முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக 2021 முதல் தற்போது வரை 4 ஆண்டுகளில் 6 ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஆணையராக இருந்த விசாகனை தவிர மற்ற அனைத்து ஆணையர்களும் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் ஓராண்டுக்குள்ளாகவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய ஆணையராக வரக்கூடியவர்கள் மதுரையின் அரசியல் பின்னணி, மக்களுடைய வாழ்வியல், அவர்களுக்கான அத்தியாவசியத் தேவைகள், மேம்படுத் துவதற்கான கட்டமைப்பு வசதிகளைத் தெரிந்து கொள்வதற்குள்ளாகவே இடமாற்றம் செய்யப்பட்டு விடுகின்றனர்.
கடைசியாக இட மாற்றம் செய்யப் பட்ட ஆணையர் தினேஷ்குமார் தனது பணிக்காலத்தை ஓராண்டு நிறைவு செய்வதற்குள் ஆட்சியராக பதவி உயர்வு பெற்றுச் சென்றுவிட்டார். மாநகராட்சி ஆணையராக வரக்கூடியவர்களை குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் வரையாவது பணியாற்ற அனுமதித்தால் மட்டுமே அவர்கள் மதுரை மாநகராட்சியை முன்னேற்றத்துக்குக் கொண்டு செல்ல முடியும். மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியும்.
ஆனால், ஆணையர்கள் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதால் வரி வருவாய் குறைவது, புதிய வருவாய் இனங்களைக் கண்டறிவது, சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்குவது, சுகாதாரம் போன்ற அனைத்துப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
அதனால், சென்னைக்கு அடுத்து இரண்டாவது மாநகராட்சியாக இருந்த மதுரை, தற்போது கோவை, திருச்சிக்கு அடுத்தநிலையில் உள்ளது. புதிதாக வரக்கூடிய ஆணையர்கள் மாநகராட்சியைப் பற்றி தெரிந்து கொள்வதற்கே குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகிவிடும். அதனால், தற்போது வந்துள்ள புதிய ஆணை யரையாவது குறைந்தபடசம் 2 ஆண்டு கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தற்போது வரை தாமதமாவதற்கு ஆணையர்களை அடிக்கடி இடமாற்றம் செய்வது தான் முக்கியக் காரணம். குடிநீர் திட்டப்பணிகள், ஆணையராக இருந்த மதுபாலன், தினேஷ்குமார் ஆகியோர் பணியாற்றிய காலத்தில்தான் விரைவாக நடந்தது. தற்போது புதிதாக வந்த ஆணையர் சித்ரா ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் திட்டப் பணிகளை லோயர் கேம்ப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்,’’ என்றனர்.
ஓராண்டுகூட பணியில் இல்லை: 2019 முதல் 2021 ஜூன் வரை ஆணையராக விசாகன் பணியாற்றினார். இவரது இடமாற்றத்துக்குப் பின் கார்த்திகேயன் பொறுப்பேற்றார். 11 மாதங்களில் கார்த்திகேயனுக்கு பதிலாக சிம்ரன் ஜீத் சிங் காலோன் நியமிக்கப்பட்டு 2022 ஜூனில் பொறுப்பேற்றார். இவர் 2023 அக்டோபரில் இடமாற்றம் செய்யப்பட்டார்.
2023 ஜூனில் பிரவீன்குமார் பொறுப்பேற்று பணியாற்றி வந்த நிலையில், அதே ஆண்டு அக்டோபரில் இடமாற்றம் செய்யப் பட்டார். அதற்குப் பின் மதுபாலன், 2023 அக்டோபர் 9-ம் தேதி பொறுப்பேற்றார். இவர் 2024 பிப்ரவரியில் இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்ற தினேஷ்குமார், ஓராண்டு நிறைவு செய்வதற்கு 10 நாள் இருக்கும் நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டார்.