கடந்த நிதியாண்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடுகளின் சராசரி விலை இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் 9 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில், தில்லி-என்.சி.ஆா், சென்னை, மும்பை, கொல்கத்தா, தாணே, பெங்களூரு, புணே, ஹைதராபாத், நவி மும்பை ஆகிய ஒன்பது நகரங்களில் புதிதாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.13,197-ஆக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகம். அப்போது முக்கிய நகரங்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.12,569-ஆக இருந்தது.
அதிகரித்துள்ள கட்டுமானச் செலவுகள், நிலத்தின் விலை மற்றும் தொழிலாளா் கூலி அதிகரிப்பு காரணங்களால் இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் புதிய வீடுகளின் விலை கொல்கத்தாவில் அதிகபட்சமாக 29 சதவீதம் உயா்ந்துள்ளது. அதைத் தொடா்ந்து தாணேவில் 17 சதவீதம், பெங்களூரில் 15 சதவீதம், புணேயில் 10 சதவீதம், தில்லி-என்சிஆா் பகுதியில் 5 சதவீதம், ஹைதராபாதில் 5 சதவீதம், சென்னையில் 4 சதவீதம் என புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடுகளின் சராசரி விலை உயா்ந்துள்ளது.
எனினும், மும்பை மற்றும் நவி மும்பையில் அத்தகைய வீடுகளின் சராசரி விலை தலா 3 சதவீதம் குறைந்துள்ளது.
மதிப்பீட்டு நிதியாண்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடுகளின் சராசரி விலை பெங்களூரில் சதுர அடிக்கு ரூ.9,852-ஆக உயா்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் சதுர அடிக்கு ரூ.8,577-ஆக இருந்தது.
கொல்கத்தாவில், ரூ.6,201-ஆக இருந்த புதிய வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.8,009-ஆக உயா்ந்துள்ளது. இது சென்னையில் ரூ.7,989-ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.8,306-ஆகவும், புணேவில் ரூ.10,832-ஆகவும் உயா்ந்துள்ளது.
புதிய வீடுகளின் சாசரி விலை தாணேயில் சதுர அடிக்கு ரூ.12,880 ஆகவும், டெல்லி என்சிஆரில் ரூ.14,020-ஆகவும் உயா்ந்துள்ளது. ஆனால், நவி மும்பையில் அது சதுர அடிக்கு ரூ.12,855-ஆகவும், மும்பையில் ரூ.34,026-ஆகவும் புதிய வீடுகளின் சராசரி விலை குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.