தங்கள் ஐந்தாவது திருமண நாளினைக் கொண்டாடும் விதமாக கேரள தம்பதிகளான கேசவ் (ரோஷன் மேத்யூ), அம்ரிதா (தர்ஷனா ராஜேந்திரன்) ஆகியோர் ராமாயண சுற்றுலாவாக இலங்கைக்கு வருகிறார்கள். தங்கள் தேசத்திற்கு வந்தவர்களை ஆண்ட்ரூ (ஷியாம் பெர்னான்டோ) என்கிற நபர் ஓட்டுநராகவும், கைடாகவுமிருந்து வழிநடத்திச் செல்கிறார்.
அது பொருளாதார நெருக்கடியில் இலங்கை மாட்டிக்கொண்டிருந்த காலகட்டம் என்பதால், வழிநெடுகிலும் அதைக் கண்டித்து சிங்கள – தமிழ் மக்கள் போராட்டங்களும், மறியல்களும் நடத்துகிறார்கள். இருப்பினும் சுற்றுலா வந்திருக்கும் நபர்களுக்கு எந்த நெருக்கடியும் அவர்கள் கொடுக்கவில்லை. இப்படியான சூழலில் பசுமை கொஞ்சுகிற இல்லற விடுதிக்கு வருகிறார்கள் தம்பதிகள். அன்றிரவு தம்பதிகளுக்கு இரவு உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடுக்கிடும் பிரச்னை ஒன்று வருகிறது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதைப் பொறுமையாகப் பேசுவதே இந்த மலையாள மொழிப் படத்தின் கதை.
காதலுக்கான அன்னியோன்னியம், சரி தவறு ஆகிய இரண்டுக்கும் நடுவே தத்தளிக்கும் மனித இயல்பு, இறுதிக்காட்சியில் நரகத்தை உடைத்து வெளிவருகிற அழுகை என தர்ஷனா ராஜேந்திரன் படத்தின் மைய கருவுக்கு வலுசேர்த்து அற்புதமான நடிப்பினை வழங்கியிருக்கிறார். அவருக்குப் போட்டியாக மனித இயல்பின் தடுமாற்றம், தன்னலத்திலிருந்து சுயநலத்துக்கு மாறுகிற நிலை, குற்றவுணர்ச்சியை போக்கடிக்க காரணம் கற்பிக்கும் மனநிலை என யதார்த்த நடிப்பினை வழங்கி தன் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறார் ரோஷன் மேத்யூ. காவல்துறை அதிகாரியாக பெரேரா, ஓட்டுநராக ஷியாம் பெர்னான்டோ, விடுதி வேலைக்காரர்களாக சம்சுதீன் மற்றும் இளங்கோ தங்களுக்கான வேலையைத் திரையில் திறம்படச் செய்திருக்கிறார்கள்.