ஜார்க்கண்ட் மாநிலம் தான்பாத்தில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரி அமைப்பு ஏழைகளிடமிருந்து கொள்ளையடிப்பதாக அமைந்துள்ளது. உங்களுக்கு இணையாக அதானியும் வரி செலுத்துகிறார்(அதானிக்கு இணையாக ஏழை மக்களும் வரி செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்). ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான தாராவி நிலம், அதானிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, கடல் விமானங்களில் செல்கிறார். கடலுக்கடியிலும் சுற்றுப்பயணம் செல்கிறார். ஆனால், ஏழைகளும் பெண்களும் விலைவாசி உயர்வால் ஏற்படும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.
உண்மை என்னவென்றால், இந்தியாவில் பெண்களும் இளைஞர்களும் மகிழ்ச்சியாக இல்லை. மோடி அவர்கள் பெரியளவில் உரையாற்றுவதை மட்டுமே காண முடிகிறது. ஆனால், அவர் எதுவும் செய்வதில்லை. விலைவாசி உயரும்போது, நம் அன்னைமார்களும், சகோதரிமார்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
நரேந்திர மோடி எல்லாவற்றிலும் ஜிஎஸ்டியை சேர்த்துள்ளார். ஒட்டுமொத்த வரி முறை, நாட்டின் ஏழை மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க ஒரு வழியாக அமைந்துள்ளது. ஏழைகளிடமிருந்து கொள்ளையடிப்பதற்கானதொரு அமைப்புதான் ஜிஎஸ்டி
ஏழைகளில் பாதிக்குப் பாதி பேர், அதாவது 50 சதவிகிதத்தினர் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், 8 சதவிகிதத்தினர் பழங்குடியினர், 15 சதவிகிதத்தினர் தலித்கள், 15 சதவிகிதத்தினர் சிறுபான்மையினர். இந்த நிலையில், பிரதமர் ஒருபோதும் தலித் அல்லது பழங்குடியின மக்களை சந்திப்பதில்லை. ஆனால் தொழிலதிபர்கள் குடும்பத்தினரின் திருமணங்களில் கலந்துகொள்கிறார்.