கிரிக்கெட் ரசிகர்களிடமும், பிசிசிஐ இடமும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியை அண்மையில் பிசிசிஐ அறிவித்தது. காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில், பார்டர் – கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்படவில்லை.
காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், தனக்கு 100 சதவிகிதம் எந்த ஒரு வலியும் இல்லை என முகமது ஷமி அண்மையில் தெரிவித்திருந்தார். பந்துவீச்சு பயிற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரது முழங்காலில் வீக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது நலனை கருத்தில் கொண்டு அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.
இதையும் படிக்க: கௌதம் கம்பீர் விரைவில் கற்றுக் கொள்வார்: ரவி சாஸ்திரி
மன்னித்து விடுங்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாத நிலையில், கிரிக்கெட் ரசிகர்களிடமும், பிசிசிஐ இடமும் முகமது ஷமி மன்னிப்புக் கேட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ வாயிலாக தெரிவித்திருப்பதாவது: நாளுக்கு நாள் எனது முயற்சிகளால் பந்துவீச்சில் முழு உடல் தகுதியை பெற்று வருகிறேன். கடுமையாக உழைத்து முழுமையான உடல் தகுதியை பெற்று போட்டியில் விளையாடுவதற்காக தயாராகி வருகிறேன். உள்ளூர் போட்டிகளிலும் விளையாடவுள்ளேன். அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும், பிசிசிஐ இடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், மிக விரைவில் சிவப்பு பந்து போட்டிகளில் விளையாட தயாராக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பாகிஸ்தானின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறாத நிலையில், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப் பந்துவீச்சாளர்களான முகேஷ் குமார், நவ்தீப் சைனி மற்றும் கலீல் அகமது ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளனர்.
கடைசியாக கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி கடைசியாக விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.