அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வுகள் இருக்கைக்கு தமிழக அரசு மேலும் ரூ.1.5 கோடி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவ தமிழக அரசு இதுவரை ரூ.3 கோடியே 44 லட்சம் வழங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது மேலும் ரூ.1.5 கோடி வழங்கியிருக்கிறது.
தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் டிச.12-ம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வரின் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. அதில், “ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவிட மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை அறிந்து மகிழ்கிறேன். தமிழ் பண்பாட்டின் குன்றாத வளமையைப் பாரெங்கும் பறைசாற்றுவதிலும், எதிர்கால தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதிலும், தமிழர்களின் வர்த்தகம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வுகள் இருக்கை சிறப்பாக பங்காற்றும் என உறுதியாக நம்புகிறேன்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விழாவில் தமிழக அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந.அருள் மற்றும் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.