திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன். இவரின் மனைவி பூங்கொடி. இவர்களுக்கு சதிஷ்குமார், விஜயகுமார் என இரு மகன்கள். இதில், மூத்த மகன் சதிஷ்குமார் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, கட்டட மேஸ்திரி வேலைச் செய்து வந்தார். இளைய மகன் விஜயகுமாரும் வேலூர் அரசு கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் படிப்பை கடந்த 2018-ம் ஆண்டில் முடித்துவிட்டு, அரசுப் பணிக்குத் தயாராகி, 7 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளை எழுதிவந்தார். ஆனாலும், அரசுப் பணி அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால், மன உளைச்சலில் இருந்துவந்த விஜயகுமார் நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

`வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது தான், தற்கொலைக்குக் காரணம். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என்று தனது டைரியில் 20 பக்கங்களில் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார் விஜயகுமார். தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்த விஜயகுமாரின் கையிலும் ஒரு கடிதம் இருந்தது. அதிலும், `வன்னியர் இட ஒதுக்கீடு வேண்டும்’ என்று ஸ்கெட்ச்சில் தனது கைப்பட எழுதியிருக்கிறார். கண்ணமங்கலம் போலீஸார், இளைஞர் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.