இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை ஒப்படைத்ததற்கு அமெரிக்க அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
“297 விலைமதிப்பற்ற பழங்கால பொருள்களை திருப்பிக் கொடுப்பதை உறுதிசெய்த அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்க அரசுக்கு நான் என்னென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சொல்லப் போனால்… திமுக பவள விழாவும் திராவிட சமரசங்களும்!
பண்பாட்டு பொக்கிஷங்களை சட்டவிரோதமாக கடத்துதல் என்பது நீண்டகால நடந்துகொண்டு இருக்கும் பிரச்னையாகும். இதில், குறிப்பாக இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.
“டெலாவேர் வில்மிங்டனில் இன்று (செப்.22) நடைபெற்ற க்வாட் உச்சி மாநாட்டின் போது தலைவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகளாவிய நலனுக்காக க்வாட் தொடர்ந்து எவ்வாறு பணியாற்றும் என்ற விவாதங்கள் பயனுள்ளதாக இருந்தது. சுகாதாரம், தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், திறன் மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என மோடி பதிவிட்டுள்ளார்.